ஏர்வாடி அருகே தண்ணீர் தேடிவந்து வேலியில் சிக்கிய மான் பலி
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே தண்ணீர் தேடி வந்த போது நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் பலியானது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த அழகிய புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி அடஞ்சேரி பகுதிக்கு வந்தது. இந்த மானை கண்ட நாய்கள் விடாமல் துரத்தி உள்ளன. இதனால் அங்கும் இங்கும் ஓடி வந்த மான் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலியில் மோதியது. இதில் மானின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானது.
இரவு நேரத்தில் இந்த மானை கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் சிக்கந்தர் பாட்சா தலைமையில் வனவர் சுதாகர், வனக்காப்பாளர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று புள்ளிமானை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் 3 மாத வயதுடைய பெண் புள்ளி மான் என்பதும், தண்ணீர் தேடிவந்தபோது நாய்கள் துரத்தியதால் வேலியில் சிக்கி படுகாயமடைந்து அதிர்ச்சியில் இறந்துள்ளது. அதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் பகத்சிங் தலைமையிலான மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு மானை உடற்கூறுபரிசோதனை செய்து கீழக்கரை வனத்துறை அலுவலக வளாக பகுதியில் புதைக்கப்பட்டது. கடும் வறட்சி காரணமாக தண்ணீரை தேடி கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மான்கள் நகர் பகுதிக்குள் வருவதும், நாய்கள் துரத்தி பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது.