விதிகளை மீறி மணல் அள்ளுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விதிகளை மீறி மணல் அள்ளுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2018 10:30 PM GMT (Updated: 30 Jun 2018 8:11 PM GMT)

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் கடந்த மாதம் 1-ந் தேதி அரசு மணல் குவாரியை தொடங்கியது. இதற்கு அரசு ஓராண்டு காலம் அனுமதி வழங்கி உள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள மணல் குவாரிக்கு மிக அருகில் தரைப்பாலம் உள்ளது. மறு முனையில் 1983-ம் ஆண்டு கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. மேலும் ஆரணி ஆற்றங்கரையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி உள்பட 25-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளுக்கு ஆரணி ஆற்றின் கரைகளில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் தேக்க மேல்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விளை நிலங்கள் இந்த ஆற்றை நம்பி உள்ளன.

இந்த நிலையில் தமிழக அரசு ஆரணி ஆற்றில் மணல் குவாரி தொடங்கியதை கண்டித்து கடந்த மாதம் 1-ந் தேதி ஊத்துக்கோட்டையில் அனைத்து கடைகளும் மூடபட்டன. அனைத்து கட்சி தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

தொடர்ச்சியாக போராட்டங்களும் நடந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோபால், செயற்குழு உறுப்பினர் சம்பத், வக்கில் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மாவட்ட குழுவை சேர்ந்த பாலாஜி, அருள் மற்றும் ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Next Story