வீரசோழபுரம் கோவில்களில் இருந்த 17 ஐம்பொன் சிலைகள் விழுப்புரம் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன


வீரசோழபுரம் கோவில்களில் இருந்த 17 ஐம்பொன் சிலைகள் விழுப்புரம் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 1 July 2018 3:15 AM IST (Updated: 1 July 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

வீரசோழபுரம் கோவில்களில் இருந்த 17 ஐம்பொன் சிலைகள், விழுப்புரம் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன. பாதுகாப்பு நலன்கருதி இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி அருகே வீரசோழபுரத்தில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் இருந்த முருகன் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது. இதையடுத்து இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

தற்போது இக்கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக சிலைகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இக்கோவிலில் உள்ள 12 ஐம்பொன் சிலைகள் மற்றும் அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்த 5 ஐம்பொன் சிலைகள் என மொத்தம் 17 ஐம்பொன் சிலைகளை கெங்கையம்மன் கோவிலில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த சிலைகளை விழுப்புரத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா உத்தரவின் பேரில் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தலைமையிலான அதிகாரிகள் கெங்கையம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 17 ஐம்பொன் சிலைகளையும், விழுப்புரம் திரு.வி.க. சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு வந்து, அங்கு பாதுகாப்பாக வைத்தனர்.

Next Story