புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது: நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்


புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது: நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
x
தினத்தந்தி 1 July 2018 4:45 AM IST (Updated: 1 July 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது. அப்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 4–ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் மட்டுமே நடந்தது. புதுவை அரசின் பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததை யொட்டி கடந்த 5–ந்தேதி சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின் முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் அரசுத்துறை செயலாளர்களை சந்தித்து பட்ஜெட் தொடர்பான மத்திய அரசின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 19–ந்தேதி புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்தநிலையில் பட்ஜெட் உடனடியாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் வெளிநாடு பயணம் மேற்கொண்டதால் சட்டசபை கூடுவது தள்ளிப்போனது.

இந்தநிலையில் புதுவை சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது நிதிப்பொறுப்பினை வகிக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுவை மாநிலம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில் நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் புதிய வரி விதிப்புகள் ஏதும் இருக்காது என்றும், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சலுகை அளிக்கும் அறிவிப்புகள் இடம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமார் 15 நாட்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவையில் வரிபாக்கி செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டு கவர்னர் அதிரடி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் பஸ் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்துவரி, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகளையும் எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

சட்டசபை கூடுவதையொட்டி புதுவை நகரப்பகுதியில் அனுமதியின்றி போராட்டங்கள் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.


Next Story