கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது கமல்ஹாசன் வீட்டில் சுவர் ஏறி குதித்து கொள்ளை முயற்சி


கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது கமல்ஹாசன் வீட்டில் சுவர் ஏறி குதித்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 1 July 2018 4:15 AM IST (Updated: 1 July 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சுவர் ஏறி குதித்து கொள்ளையடிக்க முயன்ற திட்டக்குடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் சுவர் ஏறி குதித்து கொள்ளையடிக்க முயன்ற திட்டக்குடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீடு உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகமும் இங்கு தான் செயல்படுகிறது.

கமல்ஹாசன் கட்சி தொடங்கியதில் இருந்து அவரை சந்திப்பதற்காக தினமும் ஏராளமான பேர் அவருடைய அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை கமல்ஹாசன் வீட்டினுள் வாலிபர் ஒருவர் நுழைந்துவிட்டார். சந்தேகமடைந்த காவலாளி அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்து அந்த வாலிபரை ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சபரிநாதன்(வயது 19) என்பதும், சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி என்பதும், சென்னை மயிலாப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

இதற்கிடையே கமல்ஹாசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவலாளிகள் ஆய்வு செய்தனர். அப்போது சபரிநாதன், கமல்ஹாசன் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே செல்வதும், பின்னர் வீட்டுக்குள் சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சபரிநாதனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னையில் கடந்த வாரம் நடிகை சஞ்சனா சிங்கிடம் செல்போன் வழிப்பறி செய்யப்பட்டது. இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story