வேலூரில் கலெக்டர் கார் மீது மோத முயன்ற லாரி குடிபோதையில் இருந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு


வேலூரில் கலெக்டர் கார் மீது மோத முயன்ற லாரி குடிபோதையில் இருந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 July 2018 5:00 AM IST (Updated: 1 July 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் குடிபோதையில் கலெக்டர் கார் மீது மோதுவது போன்று வந்த லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூரில் குடிபோதையில் கலெக்டர் கார் மீது மோதுவது போன்று வந்த லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் கலெக்டர் ராமன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஆற்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அலுவலக காரில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். கார் சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலக மேம்பாலத்தின் அருகே உள்ள அணுகுசாலை வழியாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணைந்தது. அப்போது பின்னால் அதிவேகத்தில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரி டிரைவர் தொடர்ச்சியாக ஹாரன் (சத்தம்) எழுப்பியபடியும், பிற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் தாறுமாறாக ஓட்டியபடியும், கலெக்டர் பயணித்த கார் மீது மோதுவது போன்று வந்து, முந்தி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர் ராமன் உடனடியாக இதுகுறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர், சத்துவாச்சாரி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் கார் டிரைவர், லாரியை சினிமா பாணியில் விரட்டி சென்றார். சிறிது தூரத்திலேயே கார் டிரைவர் லாரியை முந்தி சென்று மடக்கி நிறுத்தினார்.

இதற்கிடையே வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் சத்துவாச்சாரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். டிரைவர் குடிபோதையில் இருந்தார். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், டிரைவர் ஆற்காட்டை சேர்ந்த தமிழரசன் (வயது 23) என்பதும், ஓசூரில் இருந்து சென்னைக்கு எம்-சாண்ட் மணல் ஏற்றி செல்வதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் எம்-சாண்ட் மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதி சீட்டை சோதனை செய்தனர். அதில் 25 டன் எம்-சாண்ட் மணல் ஏற்றி செல்ல அனுமதி பெற்று விட்டு, 45 டன் எம்-சாண்ட் ஏற்றி சென்றது தெரிந்தது. இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் எம்-சாண்டு மணலுடன் லாரியை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக டிரைவர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக ரூ.28 ஆயிரம் அபராதமும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் 3 மாதம் முதல் 6 மாதம் வரை ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story