வேலூர் சலவன்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்


வேலூர் சலவன்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 1 July 2018 5:30 AM IST (Updated: 1 July 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சலவன்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர்,

வேலூர் சலவன்பேட்டை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு மர்மநபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீசார், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், வேலூர் தெற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் குழுவை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், ஜனார்த்தனன் மற்றும் போலீசார் பள்ளிக்கு உடனடியாக விரைந்தனர்.

அவர்கள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி உள்பட பல்வேறு கருவிகளை கொண்டு பள்ளி முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவவே பள்ளி முன்பு பொதுமக்கள் திரள தொடங்கினர். அங்கு தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் பள்ளிக்குள் பொதுமக்கள் நுழையாமல் தடுக்க கதவை இழுத்து மூடினர். மேலும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் மோப்ப நாய் ‘அக்னி’ வரவழைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

பள்ளியில் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, கழிவறை உள்பட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை சுமார் 2½ மணி நேரம் நீடித்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் என்பது பொய்யானது என போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பள்ளி முழுவதும் தீவிரமாக சோதனை செய்தோம். இப்பள்ளியில் 372 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் சில இடங்களில் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் தேவையில்லாத பொருட்கள் அதிகமாக கிடந்தது. இதனால் சோதனை செய்ய சில இடர்பாடுகள் எங்களுக்கு ஏற்பட்டது. எனினும் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்மநபர் பொய்யான தகவலை பரப்பி உள்ளார். அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Next Story