உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 1 July 2018 12:22 PM IST (Updated: 1 July 2018 12:22 PM IST)
t-max-icont-min-icon

மலைகள் சூழ்ந்த பகுதியில் அவர்கள் வீடு இருக்கிறது. தாய், தந்தை இருவரும் அன்றாடம் விவசாய வேலைக்கு செல்கிறார்கள்.

லைகள் சூழ்ந்த பகுதியில் அவர்கள் வீடு இருக்கிறது. தாய், தந்தை இருவரும் அன்றாடம் விவசாய வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு பெண்கள். அவர்களது பக்கத்து வீட்டில் இன்னொரு குடும்பம் வசித்துவந்தது. அவர்களுக்கு ஒரே மகன். அவனது தாயார் இறந்துவிட்டார். தந்தை லாரி டிரைவர். அவர் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையே வீடு திரும்புவார். அதனால் சிறுவயதில் இருந்தே அவன், இரண்டு பெண்களைக் கொண்ட இந்த வீட்டிலே வளர்ந்து வந்தான். சற்று தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தே சென்று பத்தாம் வகுப்பு வரை படித்த அவன், பின்பு விவசாய கூலி வேலைகளுக்கு செல்லத் தொடங்கினான்.

அந்த பெண்களில் மூத்தவள் தையல் பயிற்சி பெற்று அதில் கைதேர்ந்தவளானாள். அவளுக்கு 24 வயது. அவளை விட அவன் ஒரு வயது பெரியவன். இரண்டாவது பெண் பிளஸ்-டூ படித்துக் கொண்டிருக்கிறாள். மூத்தவள் சிறிய அளவிலான தையல் தொழிலகம் ஒன்றை வீட்டிலே நடத்தி வருகிறாள். அவன், சிறுவயதில் இருந்தே அந்த பெண்களின் வீட்டிலேயே பெரும்பாலான பொழுதைக் கழித்துவந்ததால், அவனும் அவர்களது குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டான்.

மூத்த பெண் பள்ளி இறுதி வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே, ‘அவளுக்கு, எதிர் காலத்தில் அவனையே திருமணம் செய்துவைத்துவிடலாம்’ என்று அவளது பெற்றோர் முடிவு செய்துவிட்டார்கள். அதை அரசல்புரசலாக அவள் காதிலும் போட்டுவைத்துவிட்டார்கள். அதனால் அவளும் மனப்பூர்வமாக தனது மனதில் அவனுக்கு இடம்கொடுக்கத் தொடங்கிவிட்டாள். தனது தையல் தொழிலகம் ஓரளவு வளர்்ந்து, சம்பாதிக்கும் நிலை உருவானதும் அவனை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவள் இருந்துகொண்டிருந்தாள்.

இந்த நிலையில், அந்த பகுதியில் சொந்தமாக சில கார்களைவைத்து டிராவல் ஏஜென்சி நடத்திக்கொண்டிருக்கும் நடுத்தர வயது நபர் அவளது வாழ்க்கையில் குறுக்கிட்டார். அவர், அவளை சந்தித்து ‘உன்னை நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன். நமது திருமணம் நடந்தால் நீ மகாராணி போல் வாழலாம்’ என்றார். வாக்குறுதி கொடுத்ததோடு இல்லாமல் அவளுக்கு விலை உயர்்ந்த பரிசுகளையும் கொடுக்க முன்வந்தார். ஆனால் அவைகளை ஏற்றுக்கொள்ள அவள் மறுத்துவிட்டாள்.

அவர் தன்னிடம் பேசியதையும், பரிசு கொடுக்க முன்வந்ததையும் அவள் தனது தாயாரிடம் சொன்னபோது, ‘அவர் உனக்கு கொடுத்த பரிசை வாங்கியிருக்க வேண்டியதுதானே. அவரையே நீ திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்’ என்று சொன்னார். அப்போதுதான், அவர் தன்னிடம் பேசுவதற்கு முன்பே தனது பெற்றோரிடம் திருமணம் பற்றி பேசியிருக்கிறார் என்ற தகவல் அவளுக்கு தெரிந்தது.

அந்த உண்மை தெரிந்ததும் அவள் அதிர்ந்துபோனாள். ஏனென்றால், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அவரும்- மனைவியும் சில வருடங்களாக பிரிந்துவாழ்கிறார்கள். மகன், தாயிடம் வளர்ந்து வருகிறான். அவர் முறைப்படி விவாகரத்தும் பெற்றிருக்கவில்லை.

‘இந்த உண்மைகள் தெரி்ந்தும், அவருக்கு என்னை திருமணம் செய்துகொடுக்க முயற்சிக்கிறாயே.. ஏன்?’ என்று அவள், தாயிடம் கேட்க ‘நமக்கு எந்த செலவும் வைக்காமல் அவர் உன்னை ரகசியமாக திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், அவரது செலவிலே உன் தங்கைக்கும் திருமணம் செய்துவைப்பதாக ெசால்கிறார். வயதான எங்கள் நலன்கருதியும், உன் தங்கையின் எதிர் காலம் கருதியும் இதை நீ ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று தாயார், மகளை ‘எமோஷனல் பிளாக்மெயில்’ செய்துகொண்டிருக்கிறார்.

பெற்றோருக்காகவும், தங்கைக்காகவும் தனது வாழ்க்கையை பலி கொடுத்து ரகசிய வாழ்க்கை வாழ்வதா? அல்லது சிறுவயதில் இருந்தே பழகியவனோடு வீட்டை விட்டு வெளியேறிப் போய் திருமணம் செய்துகொள்வதா? என்று முடிவெடுக்க முடியாமல் அவள் திணறிக்கொண்டிருக்கிறாள்.

‘இப்படியும் சுயநலம் கொண்ட அம்மாக்கள் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்களா?’ என்று நீங்கள் கேட்பது, எங்கள் காதுகளிலும் விழத்தான் செய்கிறது..!

- உஷாரு வரும்.

Next Story