ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமண வழிகாட்டி
ஊர்வி ஷாவும், அவரால் திருமண பந்தத்தில் இணைந்தவர்களும்.. ‘‘ஊர்வி ஷாவுக்கு கோவில்கட்டி அவரை கும்பிடக்கூட நான் தயாராக இருக்கிறேன்’’ என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார், அரவிந்த் ராணா.
ஊர்வி ஷாவும், அவரால் திருமண பந்தத்தில் இணைந்தவர்களும்..
‘‘ஊர்வி ஷாவுக்கு கோவில்கட்டி அவரை கும்பிடக்கூட நான் தயாராக இருக்கிறேன்’’ என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார், அரவிந்த் ராணா. அவர் குறிப்பிடும ஊர்வி ஷாவுக்கு 24 வயதுதான். அரவிந்துக்கு 38 வயது.
சமூகம் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாத ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தைச் சேர்ந்த அரவிந்துக்கு ஊர்விதான் முன்னின்று கல்யாணத்தை நடத்திவைத்தார் என்றால் நன்றி இருக்காதா என்ன?
இப்போதுதான் கல்லூரி முடித்து வெளிவந்திருக்கிற ஊர்வி, இயல்பான எதிர்பாலின நாட்டமுடைய சாதாரணப் பெண்தான். ஆனாலும், ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்வதில் உள்ள கஷ்டத்தை உணர்ந்து, அதற்கென ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
குஜராத்தைச் சேர்ந்த ஊர்வி, இந்த நிறுவனத்தைத் தொடங்கியது தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில். கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் மூலம் இதுவரை 42 ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ள மேலும் 49 ஜோடிகள் ‘லிவ்-இன்’ உறவில் இருக்கிறார்கள், 29 ஜோடிகள் சற்றுத் தொலைதூர, ஆனால் சீரான தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம், ஊர்வியின் நிறுவனத்தின் மூலம் ஒன்றிணைந்து வாழ்வைத் தொடங்க எண்ணியிருக்கிறார்கள்.
ஆமதாபாத்தில் பாரம்பரியமிக்க ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்த ஊர்வி மேற்கொண்டிருப்பது ஒரு துணிச்சலான முயற்சி. ‘உன்னைக் கொன்றுவிடுவேன்’, ‘ஆசிட் அடித்துவிடுவேன்’ என்றெல்லாம் இவருக்கு அன்றாடம் மிரட்டல்கள் வருகின்றன. மறுபுறம், ஓரினச்சேர்க்கை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவரை கொண்டாடுகிறார்கள். ஆலோசனை கோரிக்கை, வாழ்த்துச் செய்திகள், பத்திரிகையாளர்களின் பேட்டிக்கான அழைப்புகள் என்று ஊர்வியின் செல்போனுக்கு தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் செய்திகள் வந்து குவிகின்றன.
ஊர்வியின் மீது மதிப்பும் வியப்பும் மாறாமல் இருக்கும் அரவிந்த், ‘‘எங்கள் திருமணத்தை நடத்திவைக்க புரோகிதரான ஒரு பண்டிதரின் சம்மதத்தை ஊர்வி எப்படியோ பெற்றுவிட்டார்..’’ என்றுகூறி சிலிர்க்கிறார்.
அரவிந்த், அவரது துணையின் திருமணம், ஊர்வியின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. மும்பையில் உள்ள ஒரு சிறு அடுக்கு மாடிக் குடியிருப்பில், குறிப்பிட்ட அளவு விருந்தினர்களுடன் ரகசியமாக இந்த திருமணம் நடந்தது.
வீட்டை பூக்களால் அலங்கரிப்பது முதல், அழைப்பிதழ், இசை ஏற்பாடு, 30 விருந்தினர்களுக்கான உப சரிப்பு, சாப்பாடு அமைப்பு எல்லாவற்றையும் ஊர்வியும், ஆமதாபாத்தைச் சேர்ந்த அவரது நண்பரும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் ஒன்றின் உரிமையாளருமான அபிஷேக்குமே கவனித்துக்கொண்டனர்.
‘‘என் வாழ்வில் மிகவும் அழகான நாள், மிகச் சிறந்த விஷயம் அது’’ என்று நெகிழும் அரவிந்த் தொடர்ந்து, ‘‘நான் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவன். எனது ஜோடி வேற்று மதத்துக்காரர். ஒரு ராஜபுத்திர இளைஞனுக்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த வருக்கும் ‘திருமண’ பந்தம் ஏற்படுவதே நினைத்துப்பார்க்க முடியாதது..’’ எனச் சிரிக்கிறார்.
தங்கள் திருமணத்தை நடத்திவைக்க வந்த முதிய புரோகிதரிடம் அவர் எப்படி ஒப்புக்கொண்டார் என்று அரவிந்த் கேட்டேவிட்டாராம்.
அதற்கு அந்தப் பண்டிதர் சாதாரணமாகச் சொன்ன பதில், ‘‘தம்பி... ஓர் ஆண் இன்னொரு ஆணையோ, ஒரு பெண் இன்னொரு பெண்ணையோ திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று இந்து மதத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் கடவுளால் தீர்மானிக்கப்படுபவைதான். ஏன், அர்ஜுனனின் மகனை மணப்பதற்காக பகவான் கிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து வரவில்லையா?’’ என்ற கேள்வியோடு, வித்தியாசமாக பதிலளித்திருக்கிறார்.
சிறுவயது முதலே எதிர்பாலின நாட்டம் இல்லாமல் தன்பாலின விருப்பம் கொண்டவராக இருந் திருக்கிறார் அரவிந்த். நான்கு வயதில் தந்தையை இழந்துவிட்ட இவருக்கு, ஒரு கட்டத்தில் தாயும் மறைந்தபோது உலகமே இருண்டுவிட்டது போலத் தோன்றியிருக்கிறது. மனஅழுத்தத்தின் பிடிக்குள் சிக்கித் தவித்திருக்கிறார்.
அந்நிலையில் ஒருநாள், இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக ஊர்வியின் நிறுவனம் பற்றி அறிந்திருக்கிறார். உடனே அவர் களைத் தொடர்புகொண்டு, தனது நிலை குறித்தும், தன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள யாராவது முன்வருவார்களா என்றும் கேட்டிருக்கிறார்.
‘‘நான் ஊர்விக்கு போன் செய்து பேசியதுமே, அவர் எனது சொந்த ஊரான டெல்லிக்கு வந்து என்னுடைய சந்தேகங்கள், பயங்களைப் போக்குவதாகக் கூறிவிட்டார். யார் இப்படிச் செய்வார்கள்?’’ என்கிறார் அரவிந்த்.
இவரைப் போல, ஊர்வியால் வாழ்க்கைப் பெற்ற வாடிக்கையாளர்கள் அனைவருமே அவரை ஒரு தேவதையாகத்தான் கருதுகிறார்கள்.
புதிதாக பலரும் இவரது உதவியை நாடுவது உண்டாம். அப்படி ஒருமுறை ஜெய்ப்பூரில் இருந்து ஒருவர், தான் ஓர் ஓரினச்சேர்க்கையாளன் என்பதை தனது பெற்றோர் ஏற்க மறுப்பதாக போனில் புலம்பியிருக்கிறார்.
‘‘நான் மறுநாளே ரெயில் பிடித்து ஜெய்ப்பூருக்கு சென்றுவிட்டேன். அந்த இளைஞர் ஓர் ஓரினச்சேர்க்கையாளர், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவங்கம்மாவிடம் பேசினேன். ஆனால் அவர் தனது நிலையிலிருந்து இறங்கிவரவே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒரு பிரபல கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உளவியல் பேராசிரியர்’’ என்று கூறும் ஊர்வி, ஜெய்ப்பூரில் இருந்து தோல்வியுடன்தான் திரும்பிவந்தாராம்.
ஆனால் ஓராண்டு கழித்து, அந்தப் பெண் மணியே ஊர்விக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தாராம்.
‘என் மகன் ஓர் ஓரினச்சேர்க்கையாளன் என்று ஏற்பதை நான் அவமானமாகக் கருதியது உண்மை. ஆனால் உங்களுடன் பேசியபிறகு அது தொடர்பாகச் சிந்திக்கவும், பிறருடன் உரையாடவும் தொடங்கிய நான் என் மகனைப் புரிந்துகொண்டேன். இப்போது அவனைப் பற்றி எந்த வருத்தமும் எனக்கில்லை. அவனை அவனுடைய இயற்கைத்தன்மையுடன் நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். உங்கள் அறி முகம் எங்களுக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதம். நீங்கள் ஒருமுறை விருந்தினராக எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்’ என்று அழைப்பு விடுத் திருந்தாராம்.
ஊர்வி ஷாவின் நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் துணையைத் தேடுவோருக்கான பதிவுக்கட்டணம் ரூ.15 ஆயிரம். அதுவே, வெளிநாட்டுத் துணை தேடினால் கட்டணம் ரூ.35 ஆயிரம். வழக்கமான திருமண வரன் இணையதளங்களைப் போலவே இந்நிறுவனத்திலும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வேண்டும். 26 வயதுக்குக் குறைந்தவர்களை இவர்கள் ஏற்பதில்லை. தங்கள் சேவையை நாடுவோர், மனமுதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பொருளாதாரத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்கிறார் ஊர்வி.
‘‘ஒரே மாதிரியான மனோபாவம், பொருத்தம் கொண்ட இருவரை நாங்கள் இணைத்து வைக்கிறோம். மற்றபடி, அவர்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து எந்த அங்கீகாரமோ, சான்றிதழோ அளிக்கப்படுவதில்லை’’ என்று கூறும் ஊர்விக்கு, இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் இல்லாததைப் போல, எதிர்க்கும் சட்டம் எதுவும் இல்லை என்பதுதான் ஆறுதல்.
ஊர்வி ஷாவை மற்றவர்கள் ஆதரிப்பது இருக்கட்டும், சொந்தப் பெற்றோரே அவர் குஜராத்தில் நிறு வனத்தைத் தொடங்குவதை விரும்பவில்லை என் பதுதான் உண்மை. அதனாலேயே தெலுங்கானாவில் வந்து நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.
விரைவில் ஊர்வி ஷாவையும், ஓரினச்சேர்க்கையாளர்களையும் இந்தச் சமூகம் புரிந்துகொள்ளக்கூடும்.
Related Tags :
Next Story