அமெரிக்காவில் வென்ற ஆரோக்கிய அழகி
பட்டம் வென்ற சக போட்டியாளர்களுடன் இடது ஓரத்தில் ஜெயா மகேஷ் பெண்களின் அழகை மெச்சுவது ஆனந்தம்தான். அந்த அழகை உலகமே மெச்சும்போது பேரானந்தம் ஏற்படுகிறது.
பட்டம் வென்ற சக போட்டியாளர்களுடன் இடது ஓரத்தில் ஜெயா மகேஷ்
பெண்களின் அழகை மெச்சுவது ஆனந்தம்தான். அந்த அழகை உலகமே மெச்சும்போது பேரானந்தம் ஏற்படுகிறது. அப்படி ஒரு மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருப்பவர், கோவையை சேர்ந்த ஜெயா மகேஷ். இவர் அமெரிக்காவில் நடந்த திருமணமானவர்களுக்கான உலக அழகிப்போட்டியில் 3-வது இடத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இவரது வயது 49. கணவர் மகேஷ். ஜெயா ஏற்கனவே ‘திருமதி கோவை அழகி’ பட்டத்தையும், ‘திருமதி இந்திய அழகி’ பட்டத்தையும் வென்றவர். அவரோடு நமது உற்சாகமான உரையாடல்:
“நான் திருமதி இந்திய அழகி பட்டத்தை பெற்றிருந்ததால் உலக அழகிப்போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டேன். மிகுந்த தன்னம்பிக்கையோடு போட்டியில் கலந்துகொண்டேன். மிஸஸ் குளோப் நிறுவனம் சார்பில் கலிபோர்னியா மாநிலத்தில் பாம்ஸ்பிரிங் என்ற இடத்தில் போட்டி நடந்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 85 பெண்கள் கலந்து கொண்டனர். ஆலிவுட் நடிகை போன்ற பிரபலமானவர்களும் அதில் இடம்பிடித்திருந்தனர். அதனால் போட்டி கடுமையாக இருந்தது. இந்தியாவின் சார்பில் நான் கலந்து கொண்டேன். பல்வேறு விதங்களில் எங்கள் திறமைகளை நடுவர் குழு கணித்தது.
முதல் சுற்றில் என்னை நான் அறிமுகம் செய்துகொண்டு, இந்தியாவில் பெண்களின் பெருமைகளையும் சுட்டிக்காட்டினேன். இரண்டாவது சுற்றில் எனது ஆளுமை மற்றும் சேவை உணர்வு பற்றி வெளிப்படுத்த வேண்டியதிருந்தது. நான் இளமைக்காலம் முதல் தற்போது வரை செய்து வருகின்ற சமுதாய பணிகள் குறித்தும் எடுத்துச் சொன்னேன். குறிப்பாக பிட்னெஸ் தெரபி மூலம் நான் பெண்களுக்கு செய்யும் சேைவயை குறிப்பிட்டேன். கேள்வி பதில் சுற்றில் என்னிடம், தோல்வியை நான் எதிர்கொள்ளும் முறையை பற்றி கேட்டார்கள். நான், ‘எனது தோல்விகள்தான் என்னை மாற்றிக்கொள்ள உதவியிருக்கிறது. அதனால் தோல்விகளை நான் ஏற்றுக்கொள்வேன். தோல்விகளை எனது வெற்றிக்கான படிக்கல்லாக்கி, அதன் மூலம் சவால்களை எதிர்கொண்டு சந்தோஷப்படுவேன். அதுதான் சரித்திரம் படைக்க உதவும்’ என்று தன்னம்பிக்கையுடன் நான் பதில்அளித்தேன்.
தலைப்பு கொடுத்து பேசுதல், நடையழகில் திறனை வெளிப் படுத்துதல், புகைப்படத்தில் அழகை அற்புதமாக காட்டுதல் போன்றவைகளிலும் நான் முன்னிலை வகித்தேன். குறிப்பாக நான் விதவிதமான போஸ்களில், பல்வேறுவித ஆடைகளில், பாரம்பரியம் மற்றும் நவீன நாகரிகத்தை போட்டோக்களுக்காக வெளிப்படுத்தினேன். அது நடுவர்களை வெகுவாக கவர்ந்தது. திறமைகளின் அடிப்படையில் இறுதியில் ஐந்து பேரை தேர்வு செய்து சர்வதேச திருமதி அழகிகளாக அறிவித்தார்கள். அதில் நான் மூன்றாம் இடத்தை பிடித்தேன். முதல் இடத்தை அமெரிக்க அழகியும், 2-ம் இடத்தை ஜப்பான் அழகியும் பிடித்தனர்” என்றார்.
தனது குடும்பத்தை பற்றி இவர் சொல்கிறார்..
“எனது இயற்பெயர் ஜெயஸ்ரீ. திருமணத்துக்கு பிறகு ஜெயா மகேஷ் என்று மாற்றிக்கொண்டேன். எனது தந்தை சந்திர மோகன் ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர். தாயார் பெயர் ஆண்டாள். மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டேன். பள்ளி, கல்லூரிகளில் கல்வி மற்றும் விளையாட்டுகளில் முதலிடம் பிடித்தேன். அதனால் உடல்திறனோடு எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன். பி.காம். படித்திருக்கிறேன். கணவர் மகேஷ் எனது வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கிறார். மகள் சஞ்சனா (22) மும்பையில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். நான் திருமணத்துக்கு பிறகு பேஷன் டெக்னாலஜி படித்தேன். அதன் பின்னர் பிட்னெஸ் துறைக்குள் நுழைந்தேன். அதற்கான பயிற்சி மையம் ஒன்றையும் நடத்திவருகிறேன்” என்றார்.
தோல்வியை வெற்றியாக மாற்றும் வித்தை தெரிந்தவராக ஜெயா மகேஷ் இருக்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்..
“கர்ப்பகாலத்தில் எனக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால் என் எடை 118 கிலோவாக உயர்ந்தது. அதனால் குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலான நேரம் படுக்கையிலே கழிந்தது. அதிகளவில் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். இதற் கிடையில் பார்வைத்திறனிலும் கோளாறு ஏற்பட்டது. கார்னியா என்ற விழிப்படலம் பாதிக்கப்பட்டது. உடற்பயிற்சி, யோகா, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மூலம் தன்னம்பிக்கையோடு போராடி அதில் இருந்து மீண்டேன். ஆனால் இப்போதும் அந்த வைரஸ் பாதிப்பு எனக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை தொடர்ந்து வெல்வதற்காக நான் தினமும் உடற்பயிற்சியிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறேன். 118 கிலோ எடையை 78 கிலோவாக குறைத்தேன். இப்போது 62 கிலோ எடையை கட்டுக்குள் வைத்திருக்கிறேன். இதை நான் சொல்லக் காரணம் இருக்கிறது. இல்லத்தரசியாக இருக்க கூடியவர்கள், எண்ணத்தில் வலிமையாக, உடலில் ஆரோக்கியமாக, எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும். வீட்டில் பெண் நலமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த குடும்பமும் நலமாக இருக்கும். அதுபோல் கஷ்டம் ஏற்படும்போது பெண்கள் மனந்தளர்்ந்துவிடக்கூடாது. புதிய பலத்துடன் கஷ்டங்களை எதிர்த்து போராடவேண்டும்.
என்னை பொறுத்தவரையில் அழகு என்பது கறுப்பு, சிவப்பு என்ற நிறங்களிலோ உடல் நளினங்களிலோ, உடல் கட்டுக்கோப்பிலோ இல்லை. மனம் புதிதாக, மகிழ்ச்சியாக, எப்போதும் விழிப்பாக இருப் பதுதான் பேரழகு. அதுவே பெண்மையின் சிறப்பான அழகு. உலக அழகியாக தேர்வு செய்வதற்கு முகஅழகு, உடல் அழகு என்கிற வெளிப்புற அழகையும் மீறி, எங்களது அகஅழகு எப்படி இருக்கிறது என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. அக அழகு என்பது அறிவிலும், சேவை மனப்பான்மையிலும் வெளிப்படுகிறது. ஆரோக்கியம்தான் அழகின் அடிப்படை. நமது அடிமனதில் இருந்து வெளிப்படும் எண்ணங்கள் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும். நான் அழகும், ஆரோக்கியமும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஆய்வினை மேற்கொண்டு அதற்காக தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகம் மூலம் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறேன். நான் கற்றதையும், கண்டுபிடித்ததையும் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறேன்” என்று கூறுகிறார், ஜெயா மகேஷ். இவர் தனது வெற்றிக்கு பின்னால் தாத்தா, அப்பா, மாமனார், கணவர் ஆகிய நான்கு ஆண்கள் இருப்பதாக சொல்கிறார்.
இவர் இளம் பெண்களுக்கு தேவையான வாழ்வியல் ஆலோசனைகளையும் நிறைய தருகிறார்..
“பெண்கள் கல்லூரிப் பருவத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுடன் தேவையில்லாமல் சுற்றுவது தவறு. அந்த பழக்கம் நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் பாலியல் உணர்வுகளுக்கு ஆளாக்கிவிடும். சுய பாதுகாப்பு பெண்களுக்கு அவசியம். எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும். பயணங்களின் போது வண்டி நம்பரையும், டிரைவரையும் செல்போனில் போட்டோ எடுத்து தனது வீட்டாருக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். பெண்கள் சமூக வலைத் தளங்களை கவனமாக கையாளவேண்டும். உள் உணர்வை மதிக்க வேண்டும். அது எச்சரிக்கும் போது உஷாராகிவிடவேண்டும். பாலியல் கல்வியை குழந்தைகளுடைய வயதுக்கு ஏற்ப தாய் சொல்லித்தருவது அவசியம். அந்த கல்வி அவர்களை பல்வேறு விதமான ஆபத்துக்களில் சிக்கிவிடாமல் காக்கும். பெண்களுக்கு வீழ்ந்தாலும் எழத் தெரியவேண்டும். அந்த எழுச்சிதான் பெண்களை சாதனையாளராக்கும்..” என்று தன்னம்பிக்கையூட்டுகிறார், இந்த ஆரோக்கிய அழகி.
Related Tags :
Next Story