ஊட்டி அருகே கேத்தி பாலாடா கால்வாயை தூர்வார வேண்டும், விவசாயிகள் கோரிக்கை


ஊட்டி அருகே கேத்தி பாலாடா கால்வாயை தூர்வார வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 July 2018 4:15 AM IST (Updated: 2 July 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே கேத்தி பாலாடா கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதோடு, அதிகளவில் வனப்பகுதிகளை கொண்டு இருக்கிறது. விவசாய பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள கால்வாய்களில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஊட்டி அருகே கேத்தி பாலாடா கிராமத்தில் கால்வாய் ஒன்று உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் உற்பத்தியாகி அந்த கால்வாயில் ஓடுகிறது. கால்வாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தி கேத்தி பாலாடா மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பருவமழையின் போது பெய்த கனமழையால், விவசாய விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்பட்ட மண் கால்வாயில் படிந்து காணப்படுகிறது. காலப்போக்கில் கால்வாயின் ஆழம் மற்றும் அகலம் சுருங்கிக்கொண்டே போகிறது. புதர் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளன. இதனால் மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, விவசாய விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே, கேத்தி பாலாடா கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

கேத்தி பாலாடா கிராமத்தில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கால்வாயில் ஓடும் தண்ணீரை கொண்டு பயிர்களுக்கு ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். கால்வாயை தூர்வாரி பல மாதங்கள் இருக்கும். தற்போது கால்வாயில் மண் அதிகளவில் படிந்து இருப்பதோடு, கேரட் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் போது, விளைநிலங்களுக்கு புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும்.

கடந்த பருவமழையின் போது கால்வாயில் தண்ணீர் நிலங்களுக்குள் புகுந்ததில் கேரட் பயிரிடப்பட்டு இருந்த 2 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் கேரட் பயிர்கள் அழுக தொடங்கியது. அதன் காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கேத்தி பாலாடா கால்வாயை தூர்வார சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story