கல்பாக்கம் அருகே ஆட்டோ-கார் மோதல்; பெண் சாவு


கல்பாக்கம் அருகே ஆட்டோ-கார் மோதல்; பெண் சாவு
x
தினத்தந்தி 2 July 2018 3:30 AM IST (Updated: 2 July 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே ஆட்டோ-கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அருகே ஆட்டோ-கார் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கல்பாக்கத்தை அடுத்த பரமன்கேணி கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று கூவத்தூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை விஜயகாந்த் (வயது 33) என்பவர் ஓட்டினார். முகையூர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த ஒரு கார் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றது. இதில் நிலை தடுமாறி எதிரே வந்த மினி லாரியில் கார் மோதி அதே வேகத்தில் ஷேர் ஆட்டோ மீதும் அந்த கார் மோதியது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த பரமன்கேணி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (38), அவரது மனைவி வைதேகி (34), பவளக்கொடி (28), சிவகாமி (40), சபீனா (15), சாந்தாயி (55), பாக்கியராஜ் (40) மற்றும் அமுல் (36) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த சாந்தாயி, பவளக்கொடி மற்றும் அமுல் ஆகியோரை போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மற்றவர்களை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காரில் 6 பேர் இருந்ததாகவும் அவர்களும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பவளக்கொடி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story