அரசு நலத்திட்ட உதவி பெற கைத்தறி நெசவாளர் பெயர் பதிவு அவசியம், கலெக்டர் அறிவிப்பு


அரசு நலத்திட்ட உதவி பெற கைத்தறி நெசவாளர் பெயர் பதிவு அவசியம்,  கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

4–வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பில் கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை விடுதல் இன்றி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

விருதுநகர்,.

கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

4–வது தேசிய கைத்தறி கணக்கெடுப்பு பணி மாவட்ட பகுதிகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசின் வரையறையின்படி ஒரு வீட்டில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், கைத்தறி மற்றும் அதன் தொடர்புடைய நெசவுக்கு முந்தைய பணி, பாவுநூலுக்கு கஞ்சி தோய்த்தல், டப்பாவில் பாவு நூல் சுற்றுதல், பாவு ஓட்டுதல், தார் சுற்றுதல், அச்சு பிணைத்தல், வடிவமைப்பு செய்தல், நெசவிற்கு பிந்தைய பணிகளில் தரம் சரிபார்த்தல், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை மடித்தல் ஆகிய பணிகளை கடந்த ஒரு வருடத்தில் ஏதேனும் ஒரு நாளிலாவது செய்திருத்தல் வேண்டும். குடும்பத்தில் தறிகள் அமைக்கப்பட்டோ அல்லது தறி இல்லாமலோ இருக்கலாம்.

இந்த வரையறையின் கீழ் தகுதிபெற்ற நெசவாளர்கள் இது நாள் வரை கணக்கெடுப்பில் தங்களது பெயரினை பதிவு செய்யாமல் இருந்தால் தற்போது நடைபெற்று வரும் கணக்கெடுப்பின் கீழ் தங்களது பெயரை தவறாமல் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நெசவாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதால் நெசவாளர்கள் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து தங்களது பெயரினை விடுதல் இன்றி பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கைத்தறி துணிநூல் உதவி இயக்குனரை 9486017791 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story