100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு


100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 2 July 2018 3:45 AM IST (Updated: 2 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை,

கலெக்டர் (பொறுப்பு) இளங்கோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மாவட்டத்தில் அமைக்கப்படும் பண்ணைக்குட்டைகள் மூலம் மழை பெய்யும் போது நிலத்தில் வழிந்தோடும் மழை நீரை சேகரித்து வைத்து அந்த நிலத்தில் பயிர்களின் முக்கியமான வளர்ச்சி பருவத்தில், நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் போது பயிர்களுக்கு தேவையான நேரத்தில் உயிர் பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது.

இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வகை செய்கிறது. ஆகவே இந்த பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமானதாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமைப்பாகவும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு ரூ.100 கோடி ஒதுக்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை மற்றும் கல்லல் ஆகிய வட்டாரங்களில் 500 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூ.5 கோடி மானியத்தில் விவசாயிகளுக்கு அமைக்கப்பட உள்ளன. எனவே பயன் பெற ஆர்வம் உள்ள காளையார்கோவில் மற்றும் இளையான்குடி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சிவகங்கையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, உதவி செயற்பொறியாளர்அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் கல்லல் மற்றும் தேவகோட்டை வட்டார விவசாயிகள் காரைக்குடியில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் உழவன் செயலி மற்றும் ஸ்மார்ட், சிவகங்கா செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம். இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை, செயற் பொறியாளர் அலுவலகத்தில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story