ராமநத்தம் அருகே திருமணமான 2 மாதத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ராமநத்தம் அருகே திருமணமான 2 மாதத்தில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் முருகன்( வயது 25). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து மகள் சந்தியா என்பவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு சந்தியா முருகனுடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதை எண்ணி, முருகன் மனவேதனையில் இருந்துள்ளார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த முருகன், விஷத்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் தான் விஷம் குடித்தது பற்றி தனது தாய் பவுனம்பாளிடம் அவர் தெரிவித்தார். இதனால் பதறி போன அவர், உடனடியாக முருகனை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார்.
அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், முருகனை மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 2 மாதத்திலேயே முருகன் உயிரிழந்து இருப்பது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.