திருவண்ணாமலையில் செஞ்சி நாயக்கர் காலத்திய செப்பு நாணயம் கண்டெடுப்பு


திருவண்ணாமலையில் செஞ்சி நாயக்கர் காலத்திய செப்பு நாணயம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 2 July 2018 4:30 AM IST (Updated: 2 July 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் செஞ்சி நாயக்கர் காலத்திய செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் செஞ்சி நாயக்கர் காலத்திய செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை தாலுகா மேல்சிறுப்பாக்கம் பகுதியில் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தலைவர் பிரகாஷ், தொல்லியல் அறிஞர் சேகர், அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரேம்குமார், சுதாகர், சேது ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கி.பி.16-ம் நூற்றாண்டை சேர்ந்த செஞ்சி நாயக்கர் காலத்திய செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நாணயத்தின் ஒரு பகுதியில் திருவண்ணாமலையை குறிக்கும் வகையில் மலையை காட்சிப்படுத்தி உள்ளனர். நாணயத்திலுள்ள மலையின் மேல் பகுதியின் வலதுபுறம் சூரியச் சின்னமும், இடதுபுறம் பிறையின் சின்னமும் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்திலுள்ள மலையை சுற்றி அழகிய வட்டத்துடன் கோடும், அந்த வட்டத்தினை சுற்றி 21 புள்ளிகளும் வலதும், இடதும் கீழ்நோக்கியும் அமைக்கப்பட்டு உள்ளன.

நாணயத்தின் மறுபக்கத்தில் தெலுங்கு எழுத்தில் ‘அருணாதிரி‘ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ‘அருணாதிரி‘ என்ற அந்த வாசகத்தை சுற்றி ஒரு வட்டமும், அந்த வட்டத்தை சுற்றி 21 புள்ளிகளும் வலதும், இடதும் கீழ்நோக்கியும் அமைக்கப்பட்டு உள்ளன. ‘அருணாதிரி‘ என்ற சொல் தமிழில் ‘திருவண்ணாமலை‘ என்ற பொருள்படுகிறது. இந்த நாணயமானது நன்கு தடித்த நிலையில் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வேலூர், செஞ்சி, தஞ்சை மற்றும் மதுரை ஆகிய பகுதிகளை தலைநகராகக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி அமைந்துள்ளது.

திருவண்ணாமலை செஞ்சி நாயக்கர்களின் ஆட்சிப்பகுதிக்கு உட்பட்டதாகும். செஞ்சி நாயக்கர்கள் தன்னாட்சி செய்கின்ற காலக்கட்டத்தில் செப்பு நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் இருந்தமைக்கான முக்கிய சாட்சியாக இந்த நாணயம் விளங்குகிறது. மேலும் இதுவரை கிடைத்துள்ள செஞ்சி நாயக்கர் நாணயங்களில் ஒரு பக்கம் வட்டத்தை சுற்றிலும் புள்ளிகள் காணப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இந்த நாணயத்தின் 2 பக்கமும் உள்ள வட்டத்தை சுற்றிலும் 21 புள்ளிகள் காணப்படுவது ஆராய்வதற்கு உரியதாகும்.

மேலும் இதில் 2 மலைகள், சூரியன், பிறை வடிவில் சந்திரன் பொறிக்கப்பட்டு திருவண்ணாமலையை குறிக்கும் தெலுங்கு மொழி சொல் ‘அருணாதிரி‘ என்று எழுதப்பட்டுள்ளதால் திருவண்ணாமலைக்குரிய சிறப்பு நாணயமாக இதை நாயக்கர் மன்னர்கள் வெளியிட்டிருக்க வாய்ப்புண்டு எனக் கருத முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story