குற்றாலத்துக்கு குளிக்க சென்றபோது விபத்து: கார்-ஆட்டோ மோதல்; பெண் பலி


குற்றாலத்துக்கு குளிக்க சென்றபோது விபத்து: கார்-ஆட்டோ மோதல்; பெண் பலி
x
தினத்தந்தி 2 July 2018 4:00 AM IST (Updated: 2 July 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே கார்-ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில்பெண் பரிதாபமாக இறந்தார். சிறுமி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். குற்றாலத்துக்கு குளிக்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது.

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர்கள் ஸ்டெல்லா செல்வரத்தினம் (வயது 35), சேர்மராஜ் (46), அவருடைய மகள் திவ்யதர்ஷினி (13), தேவி (25). நல்லூரை சேர்ந்தவர் திவ்யா (22). இவர்கள் 5 பேரும் ஒரு ஆட்டோவில் நேற்று மதியம் குற்றாலத்துக்கு குளிக்க சென்றனர். ஆட்டோவை குருவன்கோட்டையை சேர்ந்த லோகநாதன் (30) ஓட்டினார். ஆட்டோ மதியம் 1.30 மணிக்கு சாலைப்புதூரை அடுத்த நவநீதகிருஷ்ணபுரம் அருகே நெல்லை-தென்காசி ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே சென்னையை சேர்ந்த இளையராஜா உள்ளிட்ட 5 பேர் குற்றாலத்தில் குளித்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக காரும், ஆட்டோவும் நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இதில் காரும், ஆட்டோவும் பலத்த சேதம் அடைந்தன. மோதிய வேகத்தில் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த ஸ்டெல்லா செல்வரத்தினம், சேர்மராஜ், திவ்யா, லோகநாதன் உள்பட 6 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆவுடையானூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஸ்டெல்லா செல்வரத்தினத்தை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றாலத்துக்கு சென்றபோது கார்-ஆட்டோ மோதிக் கொண்ட விபத்தில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story