மாநிலம் முழுவதும் 16 கோடி மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம்


மாநிலம் முழுவதும் 16 கோடி மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம்
x
தினத்தந்தி 2 July 2018 4:31 AM IST (Updated: 2 July 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

மாநிலம் முழுவதும் 16 கோடி மரக்கன்றுகள் நடும் மெகா திட்டத்தை முதல்-மந்திரி பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.

தானே,

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள மரக்கன்றுகளை நட வலியுறுத்தும் நிகழ்ச்சி தானே மாவட்டம் கல்யாணில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-மந்திரி பட்னாவிஸ் ஒரு ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 16 கோடி மரக்கன்றுகளை நடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அவர் கல்யாணில் முதல் மரக்கன்றை நட்டு இந்த மெகா திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய முதல்-மந்திரி பட்னாவிஸ், ‘நமது இயற்கை தாய்க்கு சேவை செய்ய மற்றும் ஓர் நாள் கிடைத்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு 2 கோடி மரக்கன்றுகளும், 2017-ம் ஆண்டு 5 கோடி மரக்கன்றுகளும் வெற்றிகரமாக நடப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு(2018) 16 கோடி மரக்கன்றுகளை குறிக்கோளாக நிர்ணயித்துள்ளோம். எனக்கு தெரியும் இது மிகப்பெரிய சவால்தான், ஆனால் நமது பலமும் இதைவிட பெரியது. எல்லோரும் ஒன்று சேர்ந்து பங்கேற்போம்’ என கூறினார்.

இதற்கிடையே ஈஷா யோகா நிறுவனத்தின் தலைவரான ஜக்கி வாசுதேவ், முதல்-மந்திரி பட்னாவிசை சந்தித்து நதிகள் இணைப்பு தொடர்பான திட்ட அறிக்கையை வழங்கினார். 

Next Story