எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவாக கூற வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவாக கூற வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 July 2018 5:03 AM IST (Updated: 3 July 2018 5:03 AM IST)
t-max-icont-min-icon

எந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவாக கூற வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் நேற்று 2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சட்டசபையில் இன்று (நேற்று) தாக்கல் செய்துள்ளேன். 2½ மாதத்திற்கு முன்பு மாநில திட்டக்குழு கூட்டத்தை கவர்னர் தலைமையில் கூட்டி, பட்ஜெட்டிற்கான நிதியை முடிவு செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நான் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற்று வந்து, பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். தவிர்க்க முடியாத சில காரணங்களில் பட்ஜெட் தாக்கல் செய்வது தள்ளிப்போனது.

எந்தெந்த திட்டத்திற்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது பற்றி பட்ஜெட்டில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம். இதன் மூலம் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். மாநிலத்தின் நிதி நிலை எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தெரிவிக்கப்பட்டது. இதனை மக்கள் தெரிந்து கொள்ள மத்திய அரசின் நிதி, மாநில அரசின் வருவாய், நிதி பற்றாக்குறைக்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை தெளிவாக விளக்கி கூறியுள்ளோம்.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் கல்வி, மருத்துவம், பொதுப்பணி, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் சீராக வளர்ச்சி பெற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2017-18ம் நிதி ஆண்டில் 95 சதவீதம் நிதியை செலவு செய்துள்ளோம். இந்திய அளவில் 7 சதவீதம் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தில் 11.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

கல்வி, சுகாதாரம் சிறந்த நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறோம், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ.750 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பதை அவர்கள் தெளிவாக கூற வேண்டும். அனைத்து திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 9,500 வீடுகள் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து ரூ.153 கோடி பெறப்பட்டுள்ளது.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,850 கோடியும், குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடியும் மத்திய அரசிடம் இருந்து வருகிறது. இந்த பட்ஜெட்டானது புதுவையில் உள்ள ஒரு தரப்பினருக்கு மட்டுமல்லாமல் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story