தனி மாநில அந்தஸ்து என்பதே சரியானது: சிறப்பு மாநில அந்தஸ்து கோருவது ஏமாற்று வேலை, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேட்டி


தனி மாநில அந்தஸ்து என்பதே சரியானது: சிறப்பு மாநில அந்தஸ்து கோருவது ஏமாற்று வேலை, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 July 2018 5:30 AM IST (Updated: 3 July 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து என்ற கோரிக்கை ஏமாற்று வேலை. தனி மாநில அந்தஸ்து என்பதே சரியானது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில மக்களின் வளர்ச்சிக்காக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் அரசு செயல்படுத்தவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் செயல்படுத்திய நல்ல திட்டங்களைக்கூட தொடர்ந்து செயல்படுத்தவில்லை. மாணவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்கள் எதையும் இந்த அரசு செயல்படுத்தவில்லை. அவர்களாக அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

குறிப்பாக இலவச அரிசி சரியாக வழங்கவில்லை. புதிதாக ஒருவருக்குக்கூட முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 18 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. நாராயணசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது, பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்களை சிறப்பாக இயக்குவோம், சம்பளம் பாக்கி இல்லாமல் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் அதன்படி செய்யவில்லை.

கூட்டுறவு சர்க்கரை ஆலையை நடத்த முடியாமல் மூடிவிட்டனர். இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி, அதிகாரத்துடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து கொண்டுவரும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக கூறியுள்ளார். மத்திய மந்திரியாக அவர் இருந்தபோது சிறப்பு மாநில அந்தஸ்து பெற்று கொடுத்து இருக்க முடியும். ஆனால் அதை அப்போது அவர் செய்யவில்லை. தற்போது சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்காது என தெரிந்தும் மக்களை திசை திருப்பும் நோக்கில் அதை கூறி வருகிறார்.

எதற்கெடுத்தாலும் நிதி நெருக்கடி என்று கூறுவதால் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று கேட்டால் கவர்னரை குறை கூறுகிறார். நிதி நெருக்கடியை காரணம் காட்டி எதற்கெடுத்தாலும் வரிதிணிப்புதான் நடக் கிறது. புதுவை மாநிலத்தில் அதிகார சண்டைதான் நடக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் எதையும் அரசு சரியாக செயல்படுத்தவில்லை.

எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவது இல்லை. திட்டங்களை சரியாக செயல்படுத்துவது இல்லை. இதுபோன்ற நிலையில் இந்த பட்ஜெட் தேவையா? நேரத்தோடு பட்ஜெட் தாக்கல் செய்தார்களா? என்றால் அதுவும் இல்லை. அதற்கான அனுமதியைக்கூட மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.

புதுவை யூனியன் பிரதேசம். மத்திய அரசை நம்பி தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் குறை கூறிக்கொண்டே இருந்தால் மத்திய அரசின் உதவி எப்படி கிடைக்கும். இப்படியே போனால் எப்படி புதுச்சேரி வளர்ச்சி பெறும்? கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்து இந்த பட்ஜெட் உரையை புறக்கணித்தோம்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய குறிக்கோளே புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்பது தான். கிடைக்காத சிறப்பு மாநில அந்தஸ்து என்று கூறி முதல்-அமைச்சர் காலம் கடத்துகிறார். அது ஏமாற்று வேலை. தற்போதும் அதே தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்ப உள்ளார். தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் எப்போதும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர்.

Next Story