நாமக்கல்லில் லாரி பட்டறையில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்


நாமக்கல்லில் லாரி பட்டறையில் தீ விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 3 July 2018 5:15 AM IST (Updated: 3 July 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் லாரி பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன

நாமக்கல்,

நாமக்கல் ஆர்.பி.புதூர் சாவடி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). இவர் சேலம் சாலையில் லாரி பட்டறை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென இந்த பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ மளமளவென பட்டறை முழுவதும் பரவியது. இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படைவீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இருப்பினும் பட்டறையில் இருந்த ஏர்கம்ரசர், ஜெனரேட்டர் மற்றும் மோட்டார்கள் என அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இதேபோல் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் முன்பகுதியும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அத்துடன் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களும் தீயில் எரிந்து சேதம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து செல்வராஜ் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், லாரி பட்டறையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் உள்பட சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story