நெய்வேலி அருகே மின்னல் தாக்கி வாலிபர் பலி
நெய்வேலி அருகே மின்னல் தாக்கியதில் வாலிபர் ஒருவர் பலியானார்.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பண்ருட்டியில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதேபோல் நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதியிலும் இடி மின்னலுடன் மழை பெய்தது.
இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள வடக்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வன்(வயது 22) என்பவர் மாலையில் அதே பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த காற்று வீசியது. இதில் ஆனந்த செல்வன் மீது மின்னல் தாக்கியது. இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆனந்தசெல்வன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story