வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் ரெயில் மறியல் போராட்டம்


வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் ரெயில் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2018 5:20 AM IST (Updated: 3 July 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடி கொண்டு வரப்பட்டது வன்கொடுமை தடுப்புச் சட்டம். இச்சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பல பரிந்துரைகளை செய்து உள்ளதாக தலித் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைத்திட கோரியும் மாநிலம் முழுவதும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், வேலுசாமி, சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ராமசாமி, ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி தனபால், இந்திய கணசங்கம் கட்சியின் தலைவர் முத்துசாமி, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் செந்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தலித் அமைப்பினர், திடீரென தண்டவாளத்தில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 107 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று நாமக்கல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story