லத்துவாடியில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்


லத்துவாடியில் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 3 July 2018 5:25 AM IST (Updated: 3 July 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

லத்துவாடியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் லத்துவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

லத்துவாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள மயான பாதையை தற்போது தனிநபர் ஒருவர் ஆக்கிமிரத்துக்கொண்டு பாதை விட மறுத்து வருகிறார். இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் எங்கள் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்குள்ள மயானத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் அமைத்து, குழாய் மூலம் குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர வட்டார வளர்ச்சி அலுவலர் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் மயான பாதையை ஆக்கிரமித்துள்ள தனிநபர், குழாய் அமைக்க இடம் விட முடியாது என பிரச்சினை செய்ததால், குழாய் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த வழியாக குடிநீர் குழாய் அமைக்கப்பாட்டல் லத்துவாடி புதூர், சாலையூர், செலமகவுண்டம்பாளையம், கூப்பிட்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் குடிநீர் கொண்டு செல்ல முடியும்.

எனவே மயானப்பாதையை மீட்டுத்தரவும், குடிநீர் குழாய் அமைத்து கொடுத்து, குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Next Story