ஓமலூர் அருகே கனமழை: மேற்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


ஓமலூர் அருகே கனமழை: மேற்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 July 2018 5:32 AM IST (Updated: 3 July 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே கனமழை காரணமாக மேற்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி வரை பெரும் நீர் ஆதாரமாக விளங்கும் ஆறு, சரபங்கா ஆறு ஆகும். ஏற்காடு மலையில் உற்பத்தியாகி வரும் கிழக்கு சரபங்கா ஆறு சர்க்கரை செட்டிப்பட்டி, குருமச்சிகரடு வழியாக ஓமலூர் கோட்டை அருகே வந்தடைகிறது. இதேபோல் ஏற்காடு மலையில் இருந்து வரும் மேற்கு சரபங்கா ஆறு டேனிஷ்பேட்டை அடிவாரம், பண்ணப்பட்டி, கஞ்சநாய்க்கன்பட்டி வழியாக ஓமலூர் கோட்டை அருகே வந்து சேருகிறது. இந்த இரண்டு ஆறுகளும் கோட்டை அருகே சந்தித்து சரபங்கா ஆறாக ஓடுகிறது.

மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களில் ஆண்டுதோறும் பெரும் சேதம் ஏற்படுகிறது. இதை தடுக்க பொதுப்பணி துறை சார்பில் ரூ.7½ கோடி மதீப்பீட்டில் டேனிஷ்பேட்டை அடிவாரத்தில் இருந்து வெள்ள சேதம் ஏற்படும் பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கவும், தடுப்பணைகள் கட்டவும் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஆற்றினை அளவீடு செய்து எல்லையில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

கான்கிரீட் சுவர் அமைப்பதற்காக ஆற்றின் ஓரத்தில் பள்ளம் தோண்டி அந்த மண்ணை ஆற்றின் நடுவே போட்டு விட்டு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் ஆற்றின் நடுவே குவிக்கப்பட்ட மண் இன்னும் அகற்றப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காடு, ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் கனமழை பெய்தது. இதனால் மேற்கு சரபங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் டேனிஷ்பேட்டை ஏரிக்கு செல்கிறது.

ஆனால் ஆற்றின் நடுவே மண் குவிக்கப்பட்டதால் ஆற்றின் அகலம் குறைந்து விட்டது. இதனால் ஆற்றில் பாய்ந்து செல்லும் தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் கான்கிரீட் சுவரை, அடிவாரத்தில் ஒரு பக்கம் மட்டுமே கட்டி உள்ளனர். இதனால் சுவர் கட்டாத பகுதியில் மண் கரையும் அமைக்காததால் விவசாய தோட்டத்தில் தண்ணீர் புகுகிறது. எனவே மழை காலங்களில் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் ஆற்றின் நடுவே கொட்டப்பட்டுள்ள மண்ணையும் கரையில் கொண்டு வந்து போட்டு கரையை பலப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story