விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல் 383 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 383 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை திரும்ப பெற வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, சேரன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சங்கரன், தலித் மண்ணுரிமை கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சவுரிராஜன் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு காலை 11.30 மணியளவில் ரெயில் நிலைய முதலாவது நடைமேடைக்கு சென்று அங்கிருந்து புறப்பட இருந்த சென்னை- திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ரெயில் மறியலில் ஈடுபட்ட 183 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் சின்னசேலம் ரெயில் நிலையத்தில் காரைக்கால்- பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேரையும், உளுந்தூர்பேட்டையில் மதுரை- விழுப்புரம் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுக்கரசு உள்பட 62 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஆக மொத்தம் விழுப்புரம் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் 383 பேர் கைது செய்யப்பட்ட னர். கைதான இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story