தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலை சென்னை நிபுணர்கள் குழு இன்று ஆய்வு


தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலை சென்னை நிபுணர்கள் குழு இன்று ஆய்வு
x
தினத்தந்தி 3 July 2018 5:43 AM IST (Updated: 3 July 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

தங்கச்சிமடத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்குவியலை சென்னை வெடிபொருட்கள் நிபுணர்கள் குழு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அருகே அந்தோணியார்புரம் பகுதியில் கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டியபோது வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதக்குவியல் கைப்பற்றப்பட்டது. இந்த வெடிபொருட்கள் ஆபத்தானவை என்பதால் அந்த பகுதியிலேயே குழிதோண்டி புதைத்து தண்ணீரை நிரப்பி போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த வெடிபொருட்களை நீதிபதி பாலமுருகன் நேரில் ஆய்வு செய்தார். இதன்பின்னர் இந்த வெடிபொருட்களை அழிப்பதற்கு போலீசார் தரப்பில் நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. வெடிபொருட்களை அழிப்பதுதொடர்பாக வெடிபொருட்கள் அழிப்பு நிபுணர்களின் ஒப்புதல் சான்றிதழ் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து வெடிபொருட்கள் கண்டுபிடித்து அழிக்கும் பிரிவினரின் சான்றிதழ் மற்றும் ராமநாதபுரம் தடயவியல் துறை பிரிவின் சான்றிதழ் போன்றவை மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் சார்பில் நீதிபதி வசம் வழங்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த நீதிபதி சென்னையில் உள்ள வெடிபொருட்கள் தலைமை கட்டுப்பாட்டு இணை அலுவலகத்தினரின் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒப்புதல் சான்றிதழ் வழங்கக்கோரி உத்தரவிட்டார்.

வெடிபொருட்களின் தன்மை கருதி உடனடியாக அதனை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் போலீசார் சென்னைக்கு நேரில் சென்று அந்த கடிதத்தை வழங்கி உள்ளனர்.

இதனை தொடர்ந்து வெடிபொருட்கள் கண்டுபிடித்து அழிக்கும் நிபுணர்கள் குழுவினர் சென்னையில் இருந்து இன்று(செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் மதுரை வந்து அங்கிருந்து காரில் தங்கச்சி மடம் சென்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

அவர்களின் ஒப்புதல் கடிதம் கிடைத்தவுடன் அதனை நீதிபதியிடம் சமர்ப்பித்து அதற்கான உத்தரவு பெற்று அழிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 25-ந்தேதி இரவு கைப்பற்றப்பட்ட ஆபத்தான வெடிபொருட்களை அழிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட் டுவந்த நிலையில் தற்போது அதற்கான இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story