ஹேமாவதி அணை நீர்மட்டம் உயருகிறது நீர்தேக்கத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் பாதி மூழ்கியது
ஹேமாவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதன்காரணமாக அணையின் நீர்தேக்கத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் பாதி மூழ்கியது.
ஹாசன்,
ஹாசன் மாவட்டம் கொரூர் பகுதியில் ஹேமாவதி அணை அமைந்துள்ளது. இந்த அணை கடந்த 1979-ம் ஆண்டு கட்டப்பட்டது. கர்நாடகம், தமிழ்நாடு மக்களின் ஜீவாதாரமாக இந்த அணை விளங்குகிறது. தற்போது ஹேமாவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அணைக்கு சீரான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,907.16 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,214 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,475 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஹேமாவதியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், கால்வாய் வழியாக விவசாய நிலங்களும், கே.ஆர்.எஸ். அணைக்கும் சென்ற வண்ணம் உள்ளது.
கிறிஸ்தவ ஆலயம்
ஹேமாவதி அணையின் நீர்தேக்கம் அமைந்துள்ள செட்டிஹள்ளி பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கிறிஸ்தவ ஆலயம் கடந்த 1860-ம் ஆண்டு பிரிட்டீஷ்காரர்களால் கட்டப்பட்டது. டைட்டானிக் கப்பல் வடிவத்தில் இருக்கும் இந்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வந்தனர். கடந்த 1960-ம் ஆண்டு ஹேமாவதி அணை கட்ட முடிவு செய்யப்பட்டபோது, அந்த கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மிகவும் பழமையான இந்த கிறிஸ்தவ ஆலயம், ஹேமாவதி அணையில் தண்ணீர் இல்லாத காலக்கட்டத்தில் முழுமையாக வெளியே தெரியும். அங்கு சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்வார்கள்.
பாதி மூழ்கியது
இந்த நிலையில் தற்போது ஹேமாவதி அணை சீரான வேகத்தில் உயர்ந்து வருவதால், நீர்தேக்கத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் பாதி மூழ்கி உள்ளது. ஹேமாவதி அணைக்கு இதேபோன்று தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தால், கூடிய விரைவில் அந்த கிறிஸ்தவ ஆலயம் தண்ணீரில் மூழ்கி விடும். தற்போது ஹேமாவதி அணையில் பாதி மூழ்கிய கிறிஸ்தவ ஆலயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story