திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 47 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்


திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 47 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 3 July 2018 5:55 AM IST (Updated: 3 July 2018 5:55 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 47 வாக்குச்சாவடிகளின் வரைவுப்பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.

திருவண்ணாமலை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஊரகப் பகுதிகளில் 1200-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளையும், நகரப் பகுதிகளில் 1400-க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளையும் பிரித்து தனித் தனி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்து 325 வாக்குச் சாவடிகள் உள்ளன. மேலும் புதிதாக 47 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி மொத்தம் 2 ஆயிரத்து 372 வாக்குச் சாவடிகளின் வரைவுப் பட்டியலையும், வாக்காளர் பட்டியலையும் நேற்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார்.

அப்போது சமூக நலத்துறை தனித்துணை கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதில் செங்கம் தாலுகாவில் 12 வாக்குச் சாவடிகளும், தண்டராம்பட்டு தாலுகாவில் 3 வாக்குச் சாவடிகளும், திருவண்ணாமலை தாலுகாவில் 3 வாக்குச்சாவடிகளும், திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், கலசபாக்கம் தாலுகாவில் 13 வாக்குச்சாவடிகளும், போளூர் தாலுகாவில் 2 வாக்குச்சாவடிகளும், சேத்துப்பட்டு தாலுகாவில் 2 வாக்குச்சாவடிகளும், ஆரணி தாலுகாவில் ஒரு வாக்குசாவடியும், செய்யாறு தாலுகாவில் 2 வாக்குச்சாவடிகளும், வந்தவாசி தாலுகாவில் 5 வாக்குச்சாவடிகளும், வந்தவாசி நகராட்சி பகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் வாக்குச் சாவடி இருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் வாக்குச் சாவடியின் அமைவிடம் மாற்ற வேண்டி இருந்தாலோ சம்பந்தப்பட்ட உதவி கலெக்டர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தாசில்தார், உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பமாக வருகிற 10-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். வெளியிடப்பட்ட பட்டியல் அனைத்து உதவி கலெக்டர் அலுவலகங்களிலும், தாசில்தார் அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

Next Story