செய்யாறு அருகே பசுமைவழிச்சாலை பணிக்காக வயலில் கல் ஊன்றியதை எதிர்த்து பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட மாணவி
பசுமை வழிச்சாலைக்காக விவசாய நிலத்தில் கல் ஊன்றியதை கண்டித்து அதிகாரிகள் முன்னிலையில் பெண் தீக்குளிக்க முயன்றார். அவரது மகள் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்யாறு,
சென்னையிலிருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிக்காக செய்யாறு, செங்கம் தாலுகாக்களில் அதிக அளவில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட எல்லைப்பகுதியான தேத்துறை கிராமத்திலிருந்து நிலம் அளவீடு செய்யப்பட்டு கல் ஊன்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அந்த ஊரில் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்திலேயே பள்ளிக்குள் சென்று நவீன கருவி மூலம் நிலத்தை அளவீடு செய்து கல் ஊன்றினர்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் நிலம் அளவீடு செய்து கல் ஊன்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கீழ்கொளத்தூரிலிருந்து தொடங்கியது. இந்த பணிக்காக அந்த ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி, விநாயகர் கோவில் ஆகிய இடங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நடந்தது. சாலை அமைப்பதற்காக தொடக்கப்பள்ளியும் விநாயகர் கோவிலும் முற்றிலும் அகற்றப்படும் நிலை ஏற்பட்டதால் நிலம் அளவிடும் பணிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அவர்கள் நிலம் அளவிடும் பணியில் ஈடுபட்டிருந்த தாசில்தார்கள் மகேந்திரமணி, தமிழ்மணி ஆகியோரை முற்றுகையிட்டு “நாங்கள் என்ன குற்றவாளிகளா? போலீசை குவித்து எங்களை மிரட்டி நிலத்தை பறிக்கிறீர்கள்?” என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அது ஒருபுறம் நடந்து கொண்டிருந்த நிலையில் நிலம் அளவிட்ட இடங்களில் கல் ஊன்றப்பட்டு மஞ்சள் நிற பெயிண்ட் அடித்தவாறு ஒரு குழுவினர் சென்ற வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில் கீழ்கொளத்தூரில் எழுந்த எதிர்ப்பை சமாளித்து சமரசம் செய்த தாசில்தார்கள் எருமைவெட்டி கிராமத்திற்கு சென்றனர். அந்த ஊரில் பசுமை வழிச்சாலைக்காக எல்லையம்மன் கோவில் அருகே உள்ள மண்டபம், குளம் ஆகியவை பறிபோகும் நிலை ஏற்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்குள் நிலம் அளவிடும் குழுவினர் அதே ஊரில் உள்ள விவசாயி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வயலுக்குள் இறங்கி அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த ரமேஷின் மனைவி மீனாட்சி (வயது 40), மகள் தேவதர்ஷினி (18) ஆகியோர் தங்கள் வயலில் நிலம் அளவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார்கள் மகேந்திரமணி, தமிழ்மணி ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “முன்னறிவிப்பின்றி எங்கள் நிலத்திற்குள் எப்படி இறங்கலாம். இங்கு நீங்கள் கால்வைக்கக்கூடாது. வெளியேறுங்கள்” என ஆவேசமாக கூறினர்.
அப்போது மீனாட்சி திடீரென தான் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனிலிருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதனை பிடுங்கி மீனாட்சி தீக்குளிக்க முயன்றதை தடுத்து நிறுத்தி சமரசம் செய்தனர். ஆனால் வயலில் நிலம் அளவீடு செய்து கல் ஊன்றும் பணி நடந்தது. இதனை பார்த்த அவரது மகள் தேவதர்ஷினி “நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களை மீறி எப்படி கல் நடவு செய்யலாம். நீங்கள் இங்கு ஊன்றிய கல்லை அகற்றுங்கள் இல்லாவிட்டால் நான் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என எச்சரித்தார்.
உடனே அதிகாரிகளும், போலீசாரும் பிளேடை பிடுங்குவதற்காக நெருங்கினர். அப்போது தேவதர்ஷினி பிளேடால் கழுத்தை அறுத்தார். அவரது கழுத்திலிருந்து ரத்தம் வழிந்தது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் துணியை தண்ணீரில் நனைத்து அந்த ஈர துணியை தேவதர்ஷினியின் கழுத்தில் இறுக்கி கட்டினர்.
உடனே அவரை சமரசப்படுத்த அங்கு நடப்பட்டிருந்த கல்லை மட்டும் அதிகாரிகள் அகற்றினர். எனினும் மற்ற இடங்களில் கல் நடும் பணி தொடர்ந்த வண்ணம் இருந்தது. அப்போது திடீரென மீனாட்சி மீண்டும் தனது கிணற்றின் அருகே வந்து நீங்கள் பணிகளை நிறுத்தாவிட்டால் குடும்பத்துடன் நாங்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றார். பிளேடால் கழுத்தை அறுத்த தேவதர்ஷினி பிளஸ்-2 முடித்து விட்டு அடுத்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார். மாணவி தேவதர்ஷினி பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவமும், அவரது தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story