டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் மனு
ஆப்பக்கூடலில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் பிரபாகரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் பவானி ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடைக்கு அருகில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் கோவில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதனால் பவானி ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் இந்த வழியாக நடந்து செல்லும் மாணவ -மாணவிகள் மற்றும் பெண்களுக்கு குடிமகன்களால் பெரும் தொல்லை ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
கனகாசலக்குமரன் தைப்பூச தீர்த்தக்காவடி தலைவர் சண்முகம் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘மொடக்குறிச்சி 60 வேலாம்பாளையம் கிராமத்தில் கனகமலையில் கனகாசலக்குமரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிரிவல பாதைக்கு தென்புறம் உள்ள இடத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 20 அடி ஆழத்திற்கு மண் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. எனவே அனுமதியின்றி மண் எடுத்து விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமத்திற்கு உட்பட்ட திக்கேயூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிரியப்பன் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
திக்கேயூரில் 10 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழித்தடத்தை எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நாங்கள் வீடு மற்றும் தோட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
இதுகுறித்து கோபி ஆர்.டி.ஓ, அந்தியூர் தாசில்தார் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உரிய விசாரணை நடத்தி எங்கள் பகுதியில் உள்ள வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடத்தில், விரைந்து தார்சாலை போட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் ஈரோடு கற்பகம் லே அவுட் 1-வது வீதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. எனவே மழைநீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
பொல்லான் வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல் கொடுத்திருந்த மனுவில், ‘சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு நினைவுச்சின்னம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் கைப்பற்றப்பட்ட கல்வெட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஈரோட்டில் பணியாற்றி வந்தோம். இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி, தமிழகம் முழுவதும் உள்ள நலவாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. இதனால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம். மேலும் திடீரென நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பணி நீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு மீண்டும் பணி வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
ஈரோடு வெட்டுக்காட்டுவலசு மூர்த்தி கவுண்டர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் மனோகரன் தலைமையில் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் 40 ஆண்டுகளாக குடிசை மற்றும் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 224 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நீரில் மூழ்கி உயிர் இழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், விபத்தில் காயம் அடைந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்து 500 மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story