பனப்பாக்கம் அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்


பனப்பாக்கம் அரசு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 July 2018 6:11 AM IST (Updated: 3 July 2018 6:11 AM IST)
t-max-icont-min-icon

பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பில் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பனப்பாக்கம்,

பனப்பாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 984 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக ஆதிமூலம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியில் 208 மாணவர்கள் பிளஸ்-2 படிக்கின்றனர். இவர்களுக்கு வகுப்பில் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் நேற்று மதியம் 1.30 மணியளவில் பனப்பாக்கத்தில் இருந்து ஓச்சேரி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.


இதுகுறித்து தகவல் அறிந்ததும், நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள் கூறுகையில், நாங்கள் பிளஸ்-2 படித்து வருகிறோம். எங்களுக்குப் பள்ளியில் பாடம் நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. இந்த ஆண்டு எங்களது தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு தமிழ், வேதியியல், வேளாண்மை ஆகிய பாடங்களை நடத்த போதிய ஆசிரியர்கள் இல்லை. குறிப்பாக தமிழ் பாடத்துக்கு 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை. இதேபோல் வேதியியல் பாடத்துக்கு 2 ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை, என்றனர்.

போலீசார் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் வகுப்புக்கு திரும்பினர். சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Next Story