கத்தி முனையில் நகை பறிப்பு 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு
ஈரோட்டில் மளிகை கடைக்காரர் மனைவியிடம் கத்தி முனையில் நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நல்லியம்பாளையம் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஜெயக்குமார் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஈரோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று விட்டார். இதனால் அவருடைய மனைவி கீதா (வயது 40) அதிகாலை 5 மணி அளவில் கடையை திறந்து வியாபாரத்தை கவனித்து வந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே இறங்கி, பொருட்கள் வாங்குவதுபோல் கடைக்கு வந்தனர். உடனே கீதா அவர்களிடம், என்ன வேண்டும்? என்று கேட்டார். ஆனால் அவர்கள் 2 பேரும் ‘திபு, திபு’ என கடைக்குள் புகுந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கீதா கூச்சல் போட முயன்றார்.
அதற்குள் ஒருவன் கீதாவின் கழுத்தில் கத்தியை வைத்து, சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினான். மேலும் அவர்கள் 2 பேரும் கீதாவிடம் நகையை கழற்றி தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் நகையை கழற்றி கொடுக்க மறுத்ததோடு, நகை மீது கையை வைத்து இறுக்க பிடித்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் கீதாவை தர, தரவென கடையில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது அதிகாலை நேரம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் 2 பேரும் கீதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் தரதரவென இழுத்து வந்ததில் கீதாவுக்கு கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீதாவிடம் இருந்து நகையை பறித்து சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் கத்தி முனையில் மளிகை கடைக்காரர் மனைவியிடம் துணிகரமாக நகை பறிக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story