இன்று முதல் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கூறினார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊராட்சி செயலர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை நிறுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு நிரந்தரமாக நிறுத்த உத்தரவு வெளியிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய ரூ.500 கோடி நிதி வரவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று மத்திய அரசு கூறிவிட்டது. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3-ந் தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் எங்கள் கூட்டமைப்பில் உள்ள 4 சங்கங்கள் கலந்து கொள்கின்றன. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் கிராம ஊராட்சி செயலர்கள் வரை கலந்து கொள்கிறார்கள். அதன்படி தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கு பெறுகிறார்கள். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story