திண்டுக்கல்லில் பரபரப்பு: குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து வாலிபர் மீது தாக்குதல்


திண்டுக்கல்லில் பரபரப்பு: குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 3 July 2018 6:46 AM IST (Updated: 3 July 2018 6:46 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல், 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் பீதியால் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அவ்வப்போது தாக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குறிச்சியில் மூதாட்டி ஒருவரும், அய்யலூரில் ஆந்திராவை சேர்ந்த ஒருவரும் குழந்தைகளை கடத்த வந்ததாக கூறி தாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பள்ளி குழந்தைகளிடம், அந்த வாலிபர் பேச முயன்றதாக கூறப்படுகிறது. இது அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என நினைத்து அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் புதிதாக வாங்கிய ஒரு ஜோடி தங்க கம்மல் இருந்தது. மேலும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் பொதுமக்களின் சந்தேகம் அதிகமானது.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர், அவரை அடித்து உதைத்து கட்டி வைத்தனர். இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கட்டி வைக்கப்பட்ட வாலிபரை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்த சதாம் மகன் அப்பாஸ் (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் தனது 7 வயது மகளுக்காக ஒரு ஜோடி கம்மலை வாங்கி உள்ளார். அதை மனைவிக்கு தெரியாமல் பையில் வைத்து கொண்டு வந்து விட்டதாகவும், பொதுமக்கள் சந்தேகப்பட்டு தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார். எனினும், போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story