திண்டுக்கல் அருகே புளியமரத்தில் பஸ் மோதி விபத்து
திண்டுக்கல் அருகே, புளியமரத்தில் பஸ் மோதி விபத்தில் புதுமண தம்பதி உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல்,
நெல்லை பாளையங்கோட்டை கிருஷ்ணன்கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சாய் வெங்கடேஷ் (வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கோவை வடவள்ளியை சேர்ந்த முத்துக்குமரன் மகள் நித்யஸ்ரீ (25). இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் வடவள்ளியில் திருமணம் நடந்தது. இதையடுத்து, நேற்று புதுமண தம்பதியினர் உறவினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள மணமகனின் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக, ஒரு தனியார் பஸ்சை வாடகைக்கு அமர்த்தினர். அந்த பஸ்சில் புதுமண தம்பதியினர் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் நேற்று காலை பாளையங்கோட்டைக்கு புறப்பட்டனர். பஸ்சை, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த ராதாரவி (28) ஓட்டினார். இந்த பஸ் நேற்று மாலை திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தனம்பட்டியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் டிரைவர் ராதாரவி மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த பார்வதி (39), லட்சுமி (43), பிரபு (32), உமா (48), ஹரிஸ் (13) உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
புதுமண தம்பதி லேசான காயத்துடன் தப்பினர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை முடிந்து அனைவரும் நெல்லைக்கு புறப்பட்டனர். இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பஸ்சின் ஸ்டியரிங் திடீரென கட் ஆனதால் திருப்ப முடியாமல் மரத்தின்மீது பஸ் மோதியது தெரியவந்தது.
Related Tags :
Next Story