நகைக்கடை உரிமையாளரின் மாமனார் வீட்டில் 80 பவுன் நகைகள் திருட்டு
தேனியில் நகைக்கடை உரிமையாளரின் மாமனார் வீட்டில் பூட்டை உடைத்து 80 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தேனி கோட்டைக்களம் நேருஜி தெருவை சேர்ந்தவர் சுப்புரத்தினம் (வயது73). இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எடப்பாடியில் மளிகை கடை நடத்தி வந்தார். முதுமை காரணமாக தேனியில் மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய இரு மகள் களுக்கும் திருமணமாகிவிட்டது. இதில் ஒரு மகளை தேனியை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் பிரேம்சாய் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்புரத்தினம் சேலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் பங்கேற்க சென்று விட்டார். அப்போது அவருடைய மனைவியை தேனியில் உள்ள தனது மகள் வீட்டில் விட்டுச் சென்றார். இதனால் அவருடைய வீடு பூட்டிக் கிடந்தது.
வீட்டின் முன் பகுதியில் வளர்க்கப்படும் பூச்செடிகளில் பூக்களை பறிப்பதற்காக பிரேம்சாய் வீட்டில் பணியாற்றும் காவலாளி தினமும் காலையில் வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று காவலாளி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உடனே இதுகுறித்து அவர் பிரேம்சாய்க்கு தகவல் கொடுத்தார். மேலும் தேனி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு அறையின் கதவில் பொருத்தி இருந்த பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த சுமார் 80 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்தது. சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர் கள் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘வீட்டின் சுற்றுச்சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே சென்ற மர்ம நபர், பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு பீரோவிலேயே அதன் சாவி தொங்கிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சாவியை வைத்து திறந்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story