கங்கைகொண்டானில் ரூ.200 கோடியில் உணவு பூங்கா கலெக்டர் ஷில்பா தகவல்


கங்கைகொண்டானில் ரூ.200 கோடியில் உணவு பூங்கா கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 4 July 2018 3:30 AM IST (Updated: 4 July 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் ரூ.200 கோடியில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

நெல்லை,

நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் ரூ.200 கோடியில் உணவு பூங்கா அமைக்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

பயிலரங்கம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தின பயிலரங்கம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட தொழில் மையம் சார்பில் நடந்த இந்த கூட்டத்தில் கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதன்மூலம் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நாட்டில் உள்ள 500 பெரிய தொழில் நிறுவனங்களில் 54 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. தென் கொரியாவும், ஜப்பானும் அதிகபட்ச தொழில் முதலீட்டை தமிழகத்தில் குவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில் பெருக்கத்துக்கு 24 மணி நேர மின் வினியோகமும், தரமான சாலை வசதி, விமான சேவை, கப்பல் போக்குவரத்து வசதியும் திறமையான மனித வளமும்தான் காரணம் ஆகும்.

ரூ.200 கோடியில் உணவு பூங்கா

நெல்லை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் ‘‘பிரதம மந்திரி கிசான் சம்படா’’ திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி கன்சல்டன்சி சர்வீசஸ் நிதிஉதவியுடன் வேளாண்மை வணிகத்துறை சார்பில் ரூ.200 கோடியில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உணவு பூங்கா அமைக்கப்பட இருக்கிறது.

சிப்காட் வளாக பகுதியில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மற்றும் விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக தயாரித்தல், உணவு பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள் இங்கு தொழில் நிலையத்தை அமைப்பதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. தற்போது ரூ.50 கோடியில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் நேரடியாக 250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே, தொழில் தொடங்குபவர்கள் அரசின் உதவி திட்டங்களை முழுமையாக தெரிந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

கூட்ட அரங்கம் புதுப்பிப்பு

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் தொடங்கிய 3 பேருக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதுகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக கூட்டம் நடத்தப்பட்ட அரங்கம் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டு இருந்ததால் அதனை கலெக்டர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நெல்லை தொழில் வர்த்தக கூட்டமைப்பு தலைவர் குணசிங் செல்லத்துரை, அகில இந்திய தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மயில்வாகனம், தர்மராஜ், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேஷ், முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன் மற்றும் அலுவலர்கள், தொழில் முனைவோர், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் குமரேசன் நன்றி கூறினார்.

கலெக்டருடன் செல்பி

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலெக்டர் ஷில்பா அருகில் நின்று தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story