கடையம் பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டி பதுக்கல் மான் கொம்பும் சிக்கியதால் அதிகாரிகள் விசாரணை
கடையம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டி பதுக்கப்பட்டு இருந்தன. அதனுடன் இருந்த மான் கொம்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்,
கடையம் வனப்பகுதியில் தேக்கு மரங்கள் வெட்டி பதுக்கப்பட்டு இருந்தன. அதனுடன் இருந்த மான் கொம்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடர்ந்த வனப்பகுதி
களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது கடையம் வனச்சரகம். பாபநாசம் அருகே உள்ள அனவன்குடியிருப்பு பகுதியில் இருந்து தென்காசி சாலை தோரணமலை பின்புறம் உள்ள கடவக்காடு வரை கடையம் வனச்சரகம் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதி என்பதால் பொதுமக்கள் யாரும் எளிதில் அங்கு நுழைய முடியாது.
அப்படி இருந்தும் மர்மநபர்கள் யாரும் வனப்பகுதிக்குள் நுழைந்தால் அவர்களை கண்காணிக்க சோதனை மையங்கள், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதியில் தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் சிறுத்தை, மான், மிளா, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன.
மான் கொம்பு
கடனாநதி அணையில், புது அணைக்கட்டில் இருந்து தோணியாறு செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் 5 தேக்கு மரங்கள் வெட்டி பதுக்கப்பட்டு இருந்தன. அதனுடன் ஒரு மான் கொம்பும் இருந்தது. இதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதனை பதுக்கியவர்கள் யார்? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜாவிடம் கேட்டபோது, தேக்கு மரங்கள் வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. எனது தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவினர், வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தேக்கு மரங்களை வெட்டியது யார்? மான் கொம்பு சிக்கி உள்ளதால் மான் வேட்டையாடப்பட்டு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றார்.
பரபரப்பு
கடையம் வனப்பகுதியில் மர்மநபர்கள் தேக்கு மரங்களை பதுக்கி வைத்து இருந்த இடத்தில் மான் கொம்பும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story