திருப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு தொழில்துறையினர் இறையன்பு ஐ.ஏ.எஸ். பேச்சு
திருப்பூரின் வளர்ச்சிக்கு தொழில்துறையினர் முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என்று நிகழ்ச்சியில் இறையன்பு ஐ.ஏ.எஸ். பேசினார்.
திருப்பூர்,
ஜவுளித்துறையில் இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டி கல்லூரியில், இளைஞர்கள், புதிய தொழில்முனைவோர்களுக்கு ஜவுளித்துறை புத்தாக்க வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் முன்னிலை வகித்து பேசினார். நிப்ட்-டி நிறுவன தலைவர் முருகானந்தம், இன்குபேஷன் மைய தலைவர் பெரியசாமி, சென்னை தொழில் மேம்பாட்டு கழக துணை இயக்குனர் சஜீவனா உள்பட பலர் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இறையன்பு ஐ.ஏ.எஸ். கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருப்பூரின் வளர்ச்சிக்கு தொழில்துறையினர் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். வளர்ச்சி என்பது வீட்டில் இருந்தால் குடும்பம் முன்னேறும். எல்லா குடும்பத்திலும் வளர்ச்சி இருந்தால் ஊரே முன்னேற்றம் அடையும். புதிய தொழில்முனைவோர்களுக்கு தொழில் செய்ய எண்ணம் தானாக உருவாக வேண்டும். தற்போது உள்ள இளைஞர்கள் புதுமையை விரும்புகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து துறைகளிலும் புதுமையை புகுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அதுபோன்று தான் ஆடை தயாரிப்பிலும் புதுமையை புகுத்த வேண்டும். மக்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மனப்பான்மைக்கு ஏற்ற வகையில் ஆடை தயாரிப்பில் புதுமைகளை கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் புதுமைகள் குறித்து சிந்திக்கிறார்கள். புதிய படைப்புகளை படைக்க தயாராகிறார்கள். இதற்கான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும். புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும்.
வித்தியாசமான சிந்தனைகள் தான் வெற்றி பெறும். இந்த சிந்தனை தான் பின்னலாடை வர்த்தகத்திற்கு தேவை. வர்த்தகம் எப்போதும் தோற்காது. வடிவமைப்பு, நிறம் போன்றவை வர்த்தகத்திற்கு முக்கியம். தற்போது உள்ள தொழில்முனைவோர்களுக்கு புதுமைகளை படைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆடைகளை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சந்தைப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரம் உயரும்.
எப்போதுமே மனிதன் கைவிடாத ஒன்று ஆடை. ஆடை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தற்போது உள்ள காலத்தில் அனைவரும் நேர்த்தியாக ஆடை அணிந்து வருகிறார்கள். புதிய தொழில்முனைவோர்களுக்கு சுற்றுச்சூழலை சமாளிக்க வேண்டிய சவால்கள் இருக்கிறது. இதுபோல் நெகிழிக்கு மாற்றாக எளிதாக மக்கக்கூடிய மூலப்பொருட்கள் மூலம் மாற்றுப்பொருட்களை வடிவமைக்க தொழில் முனைவோர் முன்வர வேண்டும். அவ்வாறு செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் புதிய தொழில்முனைவோர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் மாலையில் தொழில் முனைதலில் புத்தாக்க மேலாண்மை என்ற கருத்தரங்கம் நடந்தது.
இதில் தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்கள் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்கள் எத்தகைய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story