வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் 50 குட்டிகளை ஈன்று விட்டு இறந்த கண்ணாடி விரியன் பாம்பு


வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் 50 குட்டிகளை ஈன்று விட்டு இறந்த கண்ணாடி விரியன் பாம்பு
x
தினத்தந்தி 4 July 2018 4:45 AM IST (Updated: 4 July 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

அரூரில் வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த கண்ணாடி விரியன் பாம்பு 50-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்று விட்டு இறந்தது. இந்த குட்டிகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகள் மலைகள் சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு மான், காட்டுப்பன்றி, காட்டெருமை, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. மேலும் வனப்பகுதியில் மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, கொம்பேரி மூக்கன் மற்றும் அதிக விஷ தன்மை கொண்ட ஏராளமான பாம்புகள் உள்ளன.

இதில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்புறங்களுக்குள் புகுந்து வருகின்றன. இவைகள் வாகனங்களில் அடிபட்டும், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் விழுந்தும் இறந்து வருகின்றன. மேலும் மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடி வருகின்றனர்.

இந்தநிலையில், அரூர் அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை அதிக விஷதன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று பாம்பின் மீது ஏறியது. இதில் படுகாயமடைந்த அந்த பாம்பு கஷ்டப்பட்டு ஊர்ந்து சென்று சாலையோரத்தில் தான் வயிற்றில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பாம்பு குட்டிகளை ஈன்றது.

பின்னர் அந்த பாம்பு சிறிது நேரத்தில் இறந்து விட்டது. வாகனத்தில் அடிபட்டதால் சில பாம்பு குட்டிகளும் இறந்தன. சில குட்டிகள் ஊர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் சென்றன. இதனைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இறந்த பாம்பை அந்த பகுதியில் புதைத்து விட்டனர். மேலும் உயிருடன் இருந்த 50-க்கும் மேற்பட்ட குட்டிகளை அவர்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று அரூர் அருகே உள்ள பொய்யப்பட்டி காப்புக்காட்டில் விட்டனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு குட்டிகள் புகுந்ததால் பொதுமக்களிடையேபரபரப்பு ஏற்பட்டது. 

Next Story