அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி முற்றுகையிட்ட பெற்றோர்


அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி முற்றுகையிட்ட பெற்றோர்
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி ஓசூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் முல்லை நகர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 759 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். 36 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக நாகராஜ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்ந்து போராடி வருவதாகவும், அதற்கு ரூ.2 லட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டும், பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மாணவ,மாணவிகளின் பெற்றோர் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்தனர்.

இதையடுத்து நேற்று 300-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு திரண்டு வந்து, பள்ளி அருகே உள்ள, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். முற்றுகை போராட்டத்திற்கு, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பூங்காவனம், பொருளாளர் சீனிவாச ரெட்டி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது, அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இன்னும் 10 நாட்களுக்குள், இப்பள்ளி, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாவிட்டால், பெற்றோர்கள் சார்பில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் போன்ற தீவிர போராட்டங்கள் நடத்தப்படும் என்று பெற்றோர் தெரிவித்தனர். முற்றுகை போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, பெற்றோர், ஆசிரியர் கழக நிர்வாகிகள் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியத்திடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களது அறிவுறுத்தலின் பேரில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். 

Next Story