திருப்பூர் மாவட்டத்தில் 51 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்


திருப்பூர் மாவட்டத்தில் 51 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 4 July 2018 4:30 AM IST (Updated: 4 July 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 51 பயனாளிகளுக்கான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ். பழனிசாமி வழங்கினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்்சி பள்ளிகளில் பயிற்று முறை சார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு பிளஸ்-2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன்படி 4 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரமும், எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.24 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் திருப்பூர் (வடக்கு) வட்டத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கும், காங்கேயம் வட்டத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கும், அவினாசி வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கும், பல்லடம் வட்டத்தை சார்ந்த 1 பயனாளிக்கும் மற்றும் தாராபுரம் வட்டத்தை சேர்ந்த 14 பயனாளிகள் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை மூலமாக கல்வித்தொகை 1 பயனாளிக்கு ரூ.2 ஆயிரமும், 4 பேருக்கு ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை தலா ரூ.17 ஆயிரம் மதிப்பில் ரூ.68 ஆயிரமும், 1 பயனாளிக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் சக்கர நாற்காலியும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் 2 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை என மொத்தம் ரூ.4 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 51 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

முன்னதாக தொழிலாளர் நலத்துறையின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கவிதைப்போட்டி, வாசகம் எழுதுதல், கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்பேட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story