தோட்டத்தில் எலியை கொல்ல தந்தை வைத்த விஷம் கலந்த மிக்சரை சாப்பிட்ட சிறுவன் சாவு
கயத்தாறு அருகே தோட்டத்தில் எலியை கொல்ல தந்தை வைத்த விஷம் கலந்த மிக்சரை எடுத்து சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தம்பி உயிர் தப்பினான்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே தோட்டத்தில் எலியை கொல்ல தந்தை வைத்த விஷம் கலந்த மிக்சரை எடுத்து சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தம்பி உயிர் தப்பினான்.
விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வராஜ் (வயது 37). விவசாயி. இவருடைய மகன்கள் முத்து (8), மணி (5). அங்குள்ள பள்ளிக்கூடத்தில் முத்து 3-ம் வகுப்பும், மணி 1-ம் வகுப்பும் படித்தனர்.
தெய்வராஜ் தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் தட்டைப்பயறு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு இருந்தார். அந்த பயிர்களை எலிகள் அடிக்கடி தின்று சேதப்படுத்தின. எனவே, அவற்றை கொல்வதற்காக அவர் மிக்சரை வாங்கி, அதில் எலி மருந்தினை (விஷம்) கலந்து, தோட்டத்தில் ஆங்காங்கே வைத்து இருந்தார்.
மிக்சரை தின்றனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பள்ளிக்கூடம் விட்டு முத்து, மணி ஆகிய 2 சிறுவர்களும் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு எலிகளைக் கொல்வதற்காக, எலி மருந்து கலந்து வைத்திருந்த மிக்சரை பார்த்தனர்.
அதில் விஷம் கலந்து இருப்பதை அறியாத 2 சிறுவர்களும் அதை எடுத்து சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அங்கு 2 பேருக்கும் மயக்கம் ஏற்பட்டது. பதறிப்போன பெற்றோர் அவர்களுடைய முகத்தில் தண்ணீரை தெளித்து விவரம் கேட்டனர். தோட்டத்தில் இருந்த மிக்சரை எடுத்து சாப்பிட்டதாக அவர்கள் கூறியதும் அதிர்ச்சி அடைந்து கதறினர்.
சிறுவன் சாவு
உடனே, 2 சிறுவர்களையும் பெற்றோர் சிகிச்சைக்காக கயத்தாறு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலையில் முத்துவின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவனை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முத்து பரிதாபமாக உயிரிழந்தான்.
சிகிச்சைக்குப்பின் உயிர் தப்பிய மணி வீடு திரும்பினான். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தோட்டத்தில் எலிகளை கொல்வதற்காக தந்தை வைத்த விஷம் கலந்த மிக்சரை சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story