பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், வாசிப்பு திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை


பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், வாசிப்பு திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 4 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், வாசிக்கும் திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு கலெக்டர் ராமன் அறிவுரை வழங்கினார்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக கலெக்டர் ராமன் பள்ளிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் அவர் தலைமை ஆசிரியர் கோதண்டன் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கினார். அப்போது கலெக்டர் ராமன் பேசுகையில், “வங்கி, போலீஸ் நிலையம், அஞ்சலகம், பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மாணவர்களை அழைத்து சென்று அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள செய்ய வேண்டும். இதை வாரம் ஒருமுறை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு முதலில் ஒழுக்கத்தையும், பாடத்தை வாசிக்கும் திறனையும் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

இதைத்தொடர்ந்து 6-ம் வகுப்பு ஆங்கில வழி கல்வி பிரிவுக்கு சென்று அவரே பாடம் நடத்தினார். ஆங்கிலத்தில் வார்த்தைகளை கூறி அதற்கு மாணவர்களிடம் விளக்கத்தை கேட்டறிந்தார். தொடர்ந்து தமிழ் வகுப்பறைக்கு சென்று மாணவர்களை வாசிக்க சொன்னார்.

இதைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்திற்கு சென்று மாணவர்களுக்கு வழங்கும் உணவுகளை பரிசோதனை செய்து சாப்பிட்டு பார்த்தார். “உணவு சுவையாக உள்ளது. இதே போல் தினமும் சமைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் நூலகத்திற்கு சென்ற அவர் அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் தினமும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களை அழைத்து வந்து செய்தித்தாள் மற்றும் புத்தகத்தை அவசியம் படிக்க வையுங்கள் என்று கேட்டுக்கொண்டார். கலெக்டருடன் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ் உள்பட அலுவலர்கள் சென்றனர். 

Next Story