மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எடியூரப்பா பேச்சு


மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் எடியூரப்பா பேசினார்.

பெங்களூரு, 

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்டசபையில் எடியூரப்பா பேசினார்.

காத்திருக்க தயார்

கர்நாடக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. அதில் எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி வாக்குறுதி அளித்தார். விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்வதாக கூறினார். அதன்படி விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடனையும், குமாரசாமி தள்ளுபடி செய்ய வேண்டும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி ரூ.53 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக பட்ஜெட் வரை காத்திருக்க நான் தயார். குமாரசாமி, வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும்.

மக்களிடம் கூறுவோம்

முன்பு கூட்டணி ஆட்சியில் நான் துணை முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாய கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்தேன். நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவை கைவிட்டேன். பொய் வாக்குறுதிகளை கொடுத்ததால் சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரசுடன் புனிதமற்ற கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளது.

அந்த பொய்யான வாக்குறுதிகளை கொடுக்காமல் இருந்திருந்தால் உங்கள்(ஜனதா தளம் (எஸ்)) கட்சி 25 இடங்களைக்கூட தாண்டி இருக்காது. நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் கட்சியை சேர்ந்த 104 எம்.எல்.ஏ.க்களும் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, ஜனதா தளம்(எஸ்) கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மக்களிடம் கூறுவோம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

எதிர்ப்பு தெரிவித்தீர்கள்

அப்போது குமாரசாமி குறுக்கிட்டு, “விவசாயிகள் தனியாரிடம் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாக நான் கூறவில்லை. அதுபற்றி ஆலோசிப்பதாக தான் சொன்னேன். அந்த கடனை தள்ளுபடி செய்வேன் என்று நான் கூறியதாக ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அதை என்னிடம் தாருங்கள். முன்பு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாய கடன் தள்ளுபடி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நீங்கள்(எடியூரப்பா) அதற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள்“ என்றார்.

சபாநாயகர் ரமேஷ்குமார் குறுக்கிட்டு, “மந்திரிசபையில் நடந்த விஷயங்களை இங்கே பேசுவது சரியல்ல. அது மாநிலத்தின் ரகசியங்கள்“ என்றார். அதைத்தொடர்ந்து குமாரசாமி இருக்கையில் அமர்ந்தார். எடியூரப்பா தொடர்ந்து பேசினார்.

Next Story