தொடர் மழையால் மும்பை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது ரெயில்வே பாலம் இடிந்து 5 பேர் படுகாயம்


தொடர் மழையால் மும்பை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது ரெயில்வே பாலம் இடிந்து 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 July 2018 4:30 AM IST (Updated: 4 July 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக மும்பை நகர் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பை, 

தொடர் மழை காரணமாக மும்பை நகர் மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது

மும்பையில் கடந்த மாதம் முதல் வாரத் தில் பருவமழை தொடங்கியது. பருவமழையை தொடர்ந்து இரு தடவை மழை வெளுத்து வாங் கியதில் மும்பை நகரம் வெள்ளக் காடாக மாறியது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த மாதம் 25-ந் தேதி பெய்த கனமழைக்கு மும்பை மற்றும் தானேயில் சிறுவன் உள்பட 4 பேர் பலியானார்கள்.

மீண்டும் கனமழை

அதன்பிறகு அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஓரிரு முறை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தபோதிலும், வெள்ளத்தின் பிடியில் இருந்து மும்பை நகரம் தப்பியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. விடிய, விடிய கொட்டிய மழையால் நேற்று மும்பை வெள்ளத்தில் தத்தளித்தது.

ெரயில்வே நடைமேம்பாலம் இடிந்தது

இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் மும்பை அந்தேரியின் கிழக்கு, மேற்கு பகுதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ள கோகலே ரெயில்வே மேம்பாலத்தின் நடைமேம்பால பகுதி திடீரென தண்டவாளத்தின் மீது இடிந்து விழுந்தது. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. மேலும் ரெயில் உயர் அழுத்த மின்கம்பிகளில் தீப்பொறிகள் ஏற்பட்டன. இதனால் அந்தேரி ரெயில்நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதற்றத்தில் ரெயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ரெயில்வே, மாநகராட்சி மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 5 பேரை மீட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக கூப்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரும் விபத்து தவிர்ப்பு

அதிர்ஷ்டவசமாக நடைமேம்பாலம் இடிந்து விழுந்த போது அந்த வழியாக எந்த ரெயில்களும் வரவில்லை. ஏதாவது ரெயில் வந்து இருந்தால் நடைமேம்பாலம் ரெயில் மீது விழுந்து அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். இதேபோல நடைமேம்பாலம் அந்தேரி ரெயில் நிலைய மேற்கூரை மீது விழுந்து இருந்தது. எனினும் பலத்த மழை காரணமாக அந்த பகுதியில் பயணிகள் கூட்டம் இல்லை. ஒரு வேளை அங்கு வழக்கம் போல பயணிகள் குவிந்திருந்தாலும் பெரும் உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்கும்.

இந்த விபத்து குறித்து நிஷித் என்ற பயணி கூறும்போது " நான் பயணித்த ரெயில் அந்தேரியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக ரெயில் நின்றது. பயணிகள் பதற்றத்தில் ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் ஓடினர். அப்போது பாலத்தின் ஒரு பகுதி விழுந்து கிடப்பதை பார்த்தோம். ஒவர்ஹெட் வயரில் இருந்து தீப்பொறிகள் வந்து கொண்டு இருந்தன. மயிரிழையில் நாங்கள் உயிர் தப்பிவிட்டோம்" என்றார்.

இந்தநிலையில் சம்பவம் குறித்து அறிந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி ரெயில்சேவையை விரைவில் தொடங்குமாறு மாநகராட்சி, ரெயில்வே மற்றும் மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார். இதேபோல ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பயணிகள் பரிதவிப்பு

மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்தை நம்பி லட்சக்கணக்கான பயணிகள் உள்ளனர். அந்தேரி பகுதியில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து உயர் அழுத்த மின்கம்பி மீதும், தண்டவாளத்தின் மீதும் விழுந்ததால், அந்த வழியாக வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன. மேற்கு வழித்தடத்தில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவித்தனர். ரெயில் நிலையங்களில் நின்றிருந்த லட்சக்கணக்கான பயணிகளும் பரிதவித்தனர்.

மத்திய ரெயில்வேயில் மெயின், துறைமுக வழித்தடத்திலும் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தை வெள்ளம் சூழ்ந்தது, ரெயில்சேவை பாதிக்கப்பட்டது. அங்கு ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சாலை போக்குவரத்தும் பாதிப்பு

இந்தநிலையில் ரெயில் போக்குவரத்து முடக்கம் மற்றும் பலத்த மழையால் நேற்று கிழக்கு, மேற்கு விரைவு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. கோரேகாவ் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. கிழக்கு விரைவு சாலையில் கிங்சர்க்கிள் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த வழியாக செல்ல இருந்த வாகனங்கள் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டன.

இதேபோல ெரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் கோகலே பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஜூகு, அந்தேரி பகுதியில் உள்ள எஸ்.வி. ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

பலஇடங்களில் வெள்ளம்

மும்பையில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் ஷியாம் தலாவ், தாதர் இந்துமாதா, கோரேகாவ் ஒபராய் மால், குர்லா அந்தேரி மிலன் சப்வே, சயான் கிங்சர்க்கிள், வடலா உள்ளிட்ட பல பகுதிகளில் சாலையில் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தது.

இதன் காரணமாக மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சிறப்பு பஸ்கள்

இந்தநிலையில் பயணிகள் வசதிக்காக பெஸ்ட் சார்பில் 84 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் மத்திய ரெயில்வே வசாய்க்கு 2 ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரெயிலை அனுப்பி வைத்தது. அங்கு சிக்கி இருந்த பயணிகள் அந்த ரெயில் மூலம் திவா வழியாக மும்பைக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேலும் மதியத்திற்கு பிறகு சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் இடையே ரெயில்சேவை தொடங்கப்பட்டது.

Next Story