கோயம்பேடு மெட்ரோ ரெயில்நிலையத்தில் தூண்களில் செடிகள் வளர்க்கும்பணி தீவிரம்
மெட்ரோ ரெயில் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள தூண்களில் செடிகள் வளர்த்து செங்குத்து தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் கிரேகோ மறுசுழற்சி செய்யும் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரெயில் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள தூண்களில் செடிகள் வளர்த்து செங்குத்து தோட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடம் அருகில் உள்ள தூண்களில் மண்பாண்டங்களில் செடிகளை வளர்த்து செங்குத்தாக படர விட்டு உள்ளனர்.
இங்கு 400 செடிகள் நடப்பட்டு உள்ளன. மேலும் 1,250 மண்பாண்டங்களில் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைத்து தூண்களிலும் இந்த செடிகளை செங்குத்தாக படர விட உள்ளனர். இதற்கு சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது.
தூண்களில் செடிகள் வளர்ப்பதால் காற்றில் பரவும் கார்பனின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். பசுமை இந்தியா திட்டத்தை மேம்படுத்த இந்த தோட்டங்கள் உதவும். மெட்ரோ ரெயில் சேவைக்காக அமைக்கப்பட்டு உள்ள அனைத்து தூண்களிலும் இந்த வகை தோட்டங்கள் வரும் காலங்களில் அமைக்கப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story