திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து மறியல்
திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதை எதிர்த்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் மதுரை சாலையின் இருபக்கங்களிலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன. அந்த வகையில் 46 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. அதில் பலருக்கு கடந்த ஆண்டு வேறு இடத்தில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. எனினும், அவர்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.
இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது. அதன்பின்னரும் வீடுகள், கடைகளை யாரும் காலிசெய்யவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரஜினிகாந்த், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள், போலீசார் அங்கு வந்தனர். பின்னர் சாலையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றினர்.
மேலும் வீடுகளுக்கான மின்இணைப்பை துண்டித்து விட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், துணை தாசில்தார் அரவிந்த், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் வீடுகளை காலி செய்வதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது ஏற்கனவே போதிய அளவில் அவகாசம் வழங்கப்பட்டு விட்டது, எனவே, மீண்டும் 10 நாட்கள் மட்டும் அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story