வடமதுரை அருகே கருப்பணசாமி கோவிலில் சிலைகள் உடைப்பு


வடமதுரை அருகே கருப்பணசாமி கோவிலில் சிலைகள் உடைப்பு
x
தினத்தந்தி 4 July 2018 6:00 AM IST (Updated: 4 July 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே கருப்பணசாமி கோவிலில் சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை, 

வடமதுரை அருகே செங்குறிச்சி சாலையில் ஊற்றாங்கரை என்ற இடம் உள்ளது. அங்கு சப்த கன்னிமார்கள், விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில், வரலாற்று சிறப்புமிக்கதாகும். வனப்பகுதியில், வரட்டாறு ஓடை அருகே அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தில் மான், பாம்பு, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கோவிலுக்கு ஊற்றாங்கரை, வேலாயுதம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் சுற்றுலா பயணிகளும் அங்கு வருகை தருவர். நேற்று முன்தினம் ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், கோவில் வளாகத்தில் அமர்ந்து மதுபானம் குடித்து கொண்டிருந்தனர்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், அவர்களை கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், கோவில் வளாகத்தில் இருந்த சாமி சிலைகளை கற்களால் உடைத்தனர். இதில் நவக்கிரகங்கள், விநாயகர், முருகன், தீபகன்னி, பாம்பு உள்ளிட்ட சிலைகள் சேதம் அடைந்தன. சாமி சிலைகளை சேதப்படுத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சாமி சிலைகளை உடைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story